தெரிவுக்குழு விசாரணையை நிறுத்துவதற்கு நாடாளுமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டமாட்டார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் செவ்வாக்கிழமையே நடத்தப்படும்.
எனினும், இம்முறை வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என்றும், அதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுக்கவில்லை என்றும் அரத தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்படும்வரை தான் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டப்போவதில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
எனினும், இது விடயத்தில் நாடாளுமன்றமே இறுதி முடிவெடுக்கவேண்டும் என சபாநாயகர் அறிக்கை மூலம் அறிவிப்பு விடுத்தார். அத்துடன், தெரிவுக்குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று தெரிவுக்குழு உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையிலேயே, ஜனாதிபதி இன்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தமாட்டார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று அமைச்சரவை முன்னாயத்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
கருத்து தெரிவிக்க