இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப்பிரிவு காவல்துறையினர் நடத்திவந்த விசாரணைகளை இடைநிறுத்த உத்தரவிடவேண்டும் என்று தமக்கு தேசிய புலனாய்வுப் பிரிவு கோரியிருந்ததாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
தாம், பணியில் இருந்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைமீறல் மனுவில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
2019 ஏப்ரல் 8 ஆம் திகதியன்று இந்த கடிதம் தமக்கு அனுப்பப்பட்டது.
அதில், வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் தொடர்பாக மேற்கொண்டு வரும் விசாரணையை இடைநிறுத்துமாறு பயங்கரவாத தடுப்புபிரிவின் பிரதிக்காவல்துறை அதிபருக்கு பணிப்புரை விடுக்கவேண்டும் என்று கோரப்பட்டிருந்ததாக மனுதாரரான காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய புலனாய்வுப்பிரிவினரின் விசாரணை முன்னெடுப்புகளின் தார்ப்பரியங்கள் தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஏப்ரல் 4ஆம் திகதி தேசிய புலனாய்வுப்பிரிவு தமக்கு அனுப்பிய கடிதத்தில் தீவிரவாத தாக்குதல்கள் எச்சரிக்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் வழமையாக |உயர்முக்கியத்துவம்| “அவசரம்” போன்ற தலைப்புகளில் அந்த கடிதங்கள் அமைந்திருக்கவில்லை.
இருந்தபோதும் தாம், அந்த கடிதத்தை மாகாண காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு உயர்முக்கியத்துவம் என்ற தலைப்பிலேயே அனுப்பிவைத்ததுடன் தொலைபேசியிலும் பணிப்புரை விடுத்ததாக மனுதாரர் பூஜித் ஜெயசுந்தர தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க