தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு முன்னெடுக்கப்படவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான, அரசியலமைப்பு நிபுணர் ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளித்த இரண்டு அதிகாரிகளையும் அனைவரும் அறிவார்கள்.
எனவே, புலனாய்வாளர்களை முழு உலகுக்கும் வெளிச்சம்போட்டு காட்டிவிட்டோம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது.
தேசிய பாதுகாப்புக்கு, இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கருத்துகள் இருப்பின் அவற்றை பகிரங்கமாக கூறவேண்டாம் என விளக்கமளித்துள்ளோம்..
தனிப்பட்ட ரீதியில் தகவல் திரட்டப்பட்டு அறிக்கையில் அது உள்ளடக்கப்படும். சில விடயங்களை தனிப்பட்ட ரீதியில் குறிப்பிடுகின்றேன் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்த கோரிக்கையை நாம் ஏற்றோம்.
அதுமட்டுமல்ல தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் தெரிவுக்குழு ஒருபோதும் செயற்படாது. நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தகவல் அறியும் சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது.’’ என்றார் ஜயம்பதி.
கருத்து தெரிவிக்க