த.மனோகரன்( ஆய்வாளர்) ஓய்வுப்பெற்ற தொழில் திணைக்கள அலுவலர்
———————————————————————-
இலங்கையில்,1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டுமே நாட்டின் அரச கரும மொழி என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன் விளைவுகளாக இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளும் மோதல்களும் உருவாகின.
அதனால், நாட்டின் முன்னேற்றத்துக்கும் அபிவிருத்திக்கும் தடைகள் ஏற்பட்டன.
1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
இதனால், இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக தனிச்சிங்கள சட்டத்துக்கு முடிவு கட்டப்பட்டது.
நாட்டில் நடைமுறையில் உள்ள 13வது மற்றும் 16வது அரசியலமைப்பு திருத்தச்சட்டங்களின்படி, இலங்கையின் தேசிய மொழிகளாக தமிழும் சிங்களமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன
நாடு முழுவதற்குமான அரச கரும மொழிகளாக அதாவது ஆட்சி மொழிகளாகச் சிங்களமும் தமிழும் ஏற்கப்பட்டுள்ளன.
இணைப்பு மொழியாக ஆங்கிலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதேநேரம் வடக்குகிழக்கின் முதன்மை நிர்வாக மொழியாக தமிழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு, வடமேற்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, தென்மாகாணம் என்ற ஏனைய ஏழு மாகாணங்களில், முதன்மை நிர்வாக மொழிகளாக சிங்களம் உள்ளது.
எனினும் நாட்டின் எந்தவொரு பொதுமகனும் எந்தப் பகுதியிலும், அரச அலுவலத்துடன் தாம் விரும்பும் ஏதாவது ஒரு தேசிய மொழியில் தமது கடமைகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளமுடியும்.
இதற்கு சட்டத்தில் இடமுள்ளது.
அத்துடன், நாட்டின் முதன்மை நிர்வாக மொழிகள் வரையறுக்கப்பட்டுள்ள மாகாணங்களில் இருமொழிப்; பிரதேச செயலகப் பிரிவுகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கணிசமாக சிறுபான்மை மொழி பேசுவோர் உள்ள பிரதேச செயலகப்பிரிவுகளில் அவர்களின் மொழியையும் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலேயே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 41 பிரதேச செயலகப்பிரிவுகள், தமிழ் மொழிக்கும் நிர்வாக உரிமையுள்ள பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் அக்குரனை. தெல்தோட்டை, பன்வில, பஸ்பாகேகோரள, உடபலாத்த, கங்கஇஹலகோரள. கண்டி நகர்சூழ் பிரதேசம்,ஆகிய ஏழு பிரதேச செயலகப்பிரிவுகளும் தமிழ் மொழிக்கு நிர்வாக உரிமையுள்ள பிரதேச செயலகப்பிரிவுகளாக செயற்பட்டு வருகின்றன.
தொழுவ, மெததும்பரை, பாத்ததும்பரை, உடுநுவர, ஆகிய நான்கு பிரதேசசெயலகங்களையும், இருமொழி பிரதேசச் செயலகங்களாக பிரகடனப்படுத்த இணங்கப்பட்டுள்ளது.
எனவே, கண்டி மாவட்டத்தில் இருமொழி பிரதேச செயலக பிரிவுகளாக பிரகனடப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் உள்ள மத்திய,மாகாண நிறுவனங்களில், தமிழ் மக்கள் தமக்குரிய தேவைகளைத் தமிழ் மொழிமூலம் எதுவித தடையோ, தாமதமோ இன்றி திருப்திகரமாக நிறைவேற்றிக்கொள்ளும் சட்டபூர்வ உரிமையைப் பெற்றுள்ளனர்
அதேபோன்று தமிழ் மக்களால், தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் தமிழ் மொழியில் சபைக்கூட்டங்களில் உரையாற்ற உரிமை கொண்டுள்ளார்கள்.
தமிழ் மொழியில் கடமையாற்றவும் அரசியல் அமைப்பு ரீதியாக அனைத்து உரிமைகளும் உள்ளன.
எனினும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ, தமிழ் மக்களோ, கண்டி மாவட்டத்தில் தமக்குரிய மொழியுரிமையை பயன்படுத்தாமலிருக்கின்றனர்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் சபை நடவடிக்கைகளின்போது. சிங்கள மொழியிலேயே தமது உரைகளை ஆற்றுகின்றனர்.
தமிழ் மக்களும் அரச அலுவலகங்களுடனான தொடர்புகளைக் கூடுதலாக சிங்களத்திலேயே மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி மாவட்ட தமிழ் மக்களும், அவர்களது பிரதிநிதிகளும், தமது மாவட்டத்தில் தமது தாய்மொழியான தமிழுக்கு உள்ள உரிமையை புரிந்துக்கொள்ளாமையானது, அவர்களின் தாழ்வு மனப்பான்மையின் தோற்றமா? என்று கேட்கத்தோன்றுகிறது.
கிடைத்த உரிமையை அனுபவிக்கமுடியாத அல்லது முன்வராத மக்களாகக் கண்டி மாவட்ட மக்கள் உள்ளனர்.
இதனைவிடுத்து, கண்டி மாவட்ட தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் மாவட்டத்தில் தமிழ் மொழிக்குரிய உரிமைகளை உணர்ந்து அதனை பயன்படுத்த முன்வரவேண்டும்.
பெற்றுக்கொண்ட உரிமைகளை புரிந்துக்கொள்ளாத அல்லது உதாசீனம் செய்யும் மக்கள் இனமாக கண்டித் தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் இனியும் இருக்கக்கூடாது.
தமிழ் மொழியைச் செயற்படுத்தத் தடையாக உள்ள காரணிகள் இனங்காணப்பட்டு அவை களையப்படவேண்டும்.
அதற்கும் மேலாக நாட்டின் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மொழியுரிமைக்கு உயிர் கொடுக்கவேண்டியது கண்டி தமிழ் மக்களின் சமுதாயப்பொறுப்பாகும்.
கருத்து தெரிவிக்க