பண்பாடு

கோட்டையிலே பொறந்தாலும் போட்ட விதி தப்பாது.

மலையக இலக்கியம்- பசறையூர் க. வேலாயுதம்
(நாட்டுப்புற ஆய்வாளர்)
—————————————————————————–
நாட்டுப்புற பாடல்கள் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பண்பாட்டின் பரி வட்டமாகவும் விளங்கி வருகின்றன.
இந்தப்பாடல்களை தேடித்திரியும் போது அங்கொரு சமூக அடையாளமிருப்பதை காணக்கூடியதாயிருக்கிறது.
இன்றுபோல் அல்லாது அன்று பெருந்தோட்ட மக்களினது பொழுதுபோக்கு அம்சங்களாக பெரும்பாலும் விளங்கியவை பாடல்களை பாடுதல், விடுகதை போடல், கிராமபுர விளையாட்டுக்களில் ஈடுபடல் என்பனவாகும்.
எழுதாத வரிகளாக வாய்ச்சொல்லின் வீச்சாக ஒலித்த இக் இலக்கிய மரபுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் இயல்பு வாழ்க்கையை எடுத்தியம்பலாயிற்று.
ஆகவேதான், மலையக பெருந்தோட்ட மக்களின் கலை இலக்கிய கலாசார பண்பாட்டியலை மாத்திரமல்லாது உழைப்பால் உயர்ந்த அம்மக்களினது வாழ்வியல் பின்புலத்தையும் பிரதிபலிப்புகளையும் பார்ப்பதற்கு அவ்வப்போது எழுந்த மக்கிசையை இச்சமூகத்தினது வரலாற்று படிமத்தின் ஆதார சுருதியாக்கிக்கொள்ள முடிகிறது.
அந்தவகையில், இன்று அப்புத்தளை பிரதேசத்தின் முக்கிய இடங்களில் ஒன்றான “தொட்டுலாகல” எனப்படும் தொடங்கலை தோட்டத்தின் நிகழ்வுகளை நினைவுகளாக்க எண்ணுகிறேன். ஒரே இணைப்பாக இருந்த இத்தோட்டமும், இயற்தேயிலை பயிர்ச்செய்கையால் இரண்டு பிரிவுகளாக மாறியுள்ளது எனலாம்.
எனினும்,  அதன் கலாசார வெளிப்பாடுகள் சுருதி மாறாமல் இன்றுவரை அப்படியே இருக்கின்றதை காணலாம்.
எடுத்தாற் பழமொழி, தொடுத்தால் விடுகதை, படித்தால் பாடல்கள் என இயல்புடைய சுரும்பாயின் மகன் சுப்பிரமணியம் சினிமா பாடல்கள் பாடுவதிலும் கேட்பதிலும் ஆர்வம் கொண்டவன்.
மற்றைய இளைஞர்கள் போலவே தனது மரக்கறி தோட்;டத்தில் சிறிய வானொலி பெட்டியை கொண்டுபோய் வைத்துக்கொள்ளும் பழக்கமும் உண்டு.
மாலை வரை வேலைசெய்யும் மணியத்திடம் காதல் கம்பீரமும் கதகதப்பாக இருந்தது.
ஒரு நாள்
காதல் பண்ண போறியா
கற்றுத் தாரே வாரியா
காதலெனும் பூக்களுக்கு
கண்ணுதானே யூரியா
என்ற வார்த்ததை வரி அவன் வாயில் முணுமுணுக்கிறது. அந்தநேரம் பாத்து அங்குவந்த தொப்புலான் துரைசாமி ;
“ஆம சுடுரது மல்லாக்க
அத சொன்னாலும் பொல்லாப்பு”
என்றவாறு இந்தகாலத்து பசங்கள் யாரும் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறாங்க.
கட்;டுனா கந்தசாமி மகளத்தான் கட்டுவேன் இல்லாடி கயித்தில தொங்குவேனு எம்மவனே சொல்லிகிட்டிருக்கிறான்.
ஆனா என் தங்கச்சி மகள் தைலம்மா
தங்கத்துக்குத் தங்கம்
தனித்தங்கம் நானிருக்க
பித்தளத் தங்கத்துக்கு
பித்தா அலையிரியே… ன்னு
நேருக்கு நேரா கேட்குது. அந்தபுள்ள மொனங்குரதிலையும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யுது.
“எனஞ் சேர்ந்து வாழாதது கனஞ்சேர்ந்த பதருனு” அவனுகிட்ட என்னத்த எடுத்துச் சொன்னாலும் காதுலயே ஏறுதில்ல.
“ஒப்புக்கு சித்தப்பா ஒரே வீட்டுல நக்கப்பா” னு
அவங்க மாமன்மாரியே முடிவெடுக்கிறான் நாம என்ன செய்றது. வாழப்போறது அவங்க. பாக்கப்போறது நாம எனக்கூறிக்கொண்டிருந்தவேளையில் அங்குவந்த அங்கம்மா “கொளம்பு தன்னிக்கு ஒரு கோசாச்செடி ஒடச்சிக்கிட்டு வாப்பா என்று மணியிடம் கூறுகிறாள். அதற்கிடையில் தொரசாமியின் கதையைக் கேட்டவாறே
தலையில எழுதுரத – சிவன்
தள்ளி எழுதப்போரானா
பிரமன் எழுத்தில – எந்த
பெசகும் இருக்காது
மகன் வழியிலயே விட்டிடுங்க அண்ணா. ஏனா
“கோட்டையில பொறந்தாலும் போட்ட விதி தப்பாது”  என்கிறாள்.
அங்கம்மா வேறுயாருமல்ல “கள்ளவூடு” என கனிவோடு அழைக்கப்பட்டவள். சின்ன வயதுலயே தங்கையாவை தாரமாக்கிக் கொண்டவள். ஈருகுழி தங்கையா என்றால் எல்லோருக்கும் தெரியும். தம்பேதன்னை புதுக்காட்டிலிருந்து கணக்கு தீர்த்துவந்த குடும்பமே தங்கையா குடும்பம்
காட்டுச்செடி குப்பைக்கீரை
கல்லெரித் தோட்டம் – நானு
கண்டு இருந்து வந்தேன்
தம்பேத்தன்ன தோட்டம் … என்று
அங்கம்மா அடிக்கடி சொல்வதுண்டு. சாக்குவேலை செய்த தங்கையா சங்கம் சேர்ப்பதிலிருந்து கோயில் குலமென்று ஓடுவதிலும் கெட்டிக்கார மனுசன்.
நடையழகர் தங்கையானுதான் பட்டப்பெயர். அது தான்
தொடாங்கொல்ல அன்னாச்சி – ஒங்க
தொண்டமான் கச்சி என்னாச்சி
– என்று சவரிநாதன் கேட்க.
  புட்ரத்மல அன்னாச்சி – நீங்க
போக்கொடச்சது என்னாச்சி
என்று 17.50 பஞ்சப்படி போராட்டத்தின்போது சொன்னதெல்லாம். ஞாபகத்திற்கும் வருகின்றது.
புட்ரத்தமல என்றால் சிவப்பு சோசலிசம் பேசிய பிட்ரத்மலை தோட்டம்தான். ஆனாலும் பாவம் தங்கையா
எடத்த வச்சிருந்தாலும் ரொம்பநாள் வாழ
குடுத்துவச்சிருக்கனும்
ஆனால் அது தங்கையாவுக்கு கிடைக்கவில்லை. கொழுந்து சாக்கினை தூக்கிக்கொண்டு போகும் போதே நெஞ்சுவலி ஏற்பட்டு 50 வயதிலயே உசுரு பொசுக்குனு போயிருச்சி அன்றிலிருந்து அங்கம்மா புள்ளங்களை வச்சிக்கிட்டு காலத்தை ஓட்டவேண்டியதாயிருச்சி யாரு உதவியும் கிடைக்கவில்லை.
நீந்தத் தெரியாத மீன்களும் இல்ல. ஓடத்தெரியாத மான்களும் இல்ல.  ஆனா வாழத்தெரியாத மனுசன்தான் நம்மல்ல இருக்கோம்.
வருத்தம் வந்தநேரமே மருந்துமாயம் எடுத்திருந்தா இப்படி ஒரு நௌம வந்திருக்குமா என்று அங்கம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் வடிவேலும் இப்ப செத்து ரொம்ப நாளாச்சி.
ஆனாள்.  அங்கம்மா அன்று அழுது தீர்த்த ஒப்பாரி இன்று வரையும் மனதை குடைகிறது.
எட்டுத்தல வாச
இருபொறமும் கண்ணாடி
இருந்தா முகம் தெரியும் – நீங்க
எந்திரிச்சா சோதி மிச்சம்
பத்துத் தலவாச
பக்கமெல்லாம் கண்ணாடி
பாத்தா முகம் தெரியும் – நீங்க
பயணப்பட்டா சோதி மின்னும்
தங்கப் புடி லேஞ்சி
தருமரோட கைலேஞ்சி
தடத்திலேயே விட்டெறிஞ்சா
தடமும் கிடுகிடுக்கும் – நீங்கப் போகும்
தங்க ரதம் ஓசையிடும்
பொன்னு புடி லேஞ்சு
புன்னியரு கைலேஞ்சி
பூமியில விட்டெரிஞ்சா
பூமி கிடு கிடுங்கும் – நீங்கப் போகும்
பொன்னுரதம் ஓசையிடும்
கத்தரிக்கா பச்ச நெறம் -என்
கருணன் கை பூமால
கத்தி சொலண்டு வரும் – என்
கருணன் பட வென்டு வரும்
வெள்ளரிக்கா பச்ச நெறம்
வீமன் கை பூமாலை
வெள்ளி சொலண்டுவரும் -ஒங்க
வீமன் பட வென்றுவரும்
நல்ல பலா மரமே
நடராசா கட்டிடமே
நல்ல பிலா வாதொடிய
நம்புனவ பொய்யானேன்
ஈரப்பலா மரமே
எடராசா கட்டிடமே
ஈரப்பலா வாதொடிய
எண்னுனவ பொய்யானேன்
இப்படியெல்லாம் ஒப்பாரி பாடும் மங்கம்மா விரும்பிய காதலை திரும்பிபார்த்து அக்காதலர்களை சேர்த்துவைக்க விரும்புபவள். தொரசாமி அண்னே
“ கெரகம் பிடிச்ச நார
கெலுத்திய பிடிச்சு முழுங்குனிச்சா
அந்தமாறி அவங்கவங்க விரும்புரத அப்படியே செஞ்சி வக்கிரதுதான் இந்த காலத்துக்கு நல்லது. இல்லேனா அதுகதுக இஸ்டத்துக்கு முடிவெடுத்துருங்க என்கிறாள்.
கோவா கீரையுடன் கேரட் கிழங்கும் கொஞ்சம் சேர்த்து சுப்பிரமணி அங்கம்மாவிடம் கொடுக்கிறான். தொரசாமியும் உரத்தைப் போட பூமியை கிண்டுகிறான்.
வளரும்….

கருத்து தெரிவிக்க