யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்களின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஜூன் 21ஆம் திகதியன்று நீதிமன்றில் முன்னிலையாகவேண்டும்.
இந்தநிலையில் கோட்டாபய இந்த வழக்கில் முன்னிலையாவதற்கு எவ்வித பாதுகாப்பு பிரச்சனைகளும் இல்லை என்று அவரின் சட்ட உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சோசலிஸ முன்னிலைக்கட்சியின் அரசியல் நடவடிக்கையாளர்களான லலித்குமர் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகியோர்,2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் போயினர்.
மனித உரிமைகள் தின நிகழ்வை ஏற்பாடு செய்ய சென்றிருந்தவேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.
இந்தநிலையில் இவர்கள் பாதுகாப்புப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவேண்டும் என்று கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
சாட்சிகளின் வாக்குமூலப்படி பருத்தித்துறையில் இருந்து உந்துருளியில் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இந்த இருவரையும் கைதடியில் வைத்து வெள்ளைவேனில் வந்த குழு ஒன்று இடைமறித்து அவர்களை ஏற்றிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதியி;ல் படைத்தரப்பே வெள்ளை வேன் கடத்தல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகிவந்தன.
இந்தநிலையில் அப்போது அமைச்சராக இருந்த கேஹலிய ரம்புக்வெல்ல, வீரராஜ் மற்றும் லலித் குகன் ஆகியோர் உயிருடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதுவே இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக மாறியது.
இது தொடர்பான சாட்சியத்துக்காகவே கோட்டாபய நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க