யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களைவ ழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
மாணவர்கள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் நடத்தியிருந்தனர்.
ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்து அனைத்து பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டன..
கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகம் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
இத் தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆவணங்கள் மீட்கப்பட்ட குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை மண்டபத்தில் இருந்த தியாகி திலீபனின் புகைப்படம் தொடர்பில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளரும் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும், அவர்கள் மீது பயன்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு, அவர்கள் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரி மாணவர்கள் நேற்று முதல் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது போராட்டத்தினை வலுச் சேர்க்கும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன் ஒன்று கூடிய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.
இப் போராட்டத்தில் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் தாங்கியவாறு அமைதியான வகையில் மாணவர்கள் தமது போராட்டத்தினை நடத்தியிருந்தனர்.
கருத்து தெரிவிக்க