ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அனைவரையும், ஒரே மேடையில் கொண்டு வந்து, பொதுமக்களை கேள்விகளுக்கு பதிலளிக்கச் செய்யும் நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்படவுள்ளது.
‘பவ்ரல்’ தலைமையிலான ‘மார்ச் 12 இயக்கம்’ இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, ‘பவ்ரல்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
”இந்த நிகழ்வு இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருக்கும். கொழும்பு சுகததாச உள்ளரங்கில் வரும் ஒக்ரோபர் முதல் வாரத்தில் இந்த நிகழ்வு நடைபெறும்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகள், கலைஞர்கள், ஏனைய துறை சார்ந்த விருந்தினர்கள் இதில் பங்கேற்பார்கள்.
மேடையில் வேட்பாளர்கள் முன் எழுப்பப்பட வேண்டிய கேள்விகளை நாங்கள் செப்ரெம்பர் 20 ஆம் நாளுக்கு முன்னர், சேகரிப்போம்.
இது மக்களைப் பற்றிய விடயங்கள் குறித்து, வேட்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை வழங்கும்.
கேள்விகளை என்ற rohanapaffrel@email.com மின்னஞ்சலுக்கோ, No.16, Byrde Place, Pamankada Rd, Kirulapana என்ற முகவரிக்கோ அனுப்பலாம்.
இது ஒரு அறிவார்ந்த விவாதமாகவும், நாட்டின் ஜனாதிபதி யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க, ஒரு சிறந்த வாய்ப்பாகவும் மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க