கூட்டணி அமைத்து தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இன்று (27) முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சில், பசில் ராஜபக்ச தலைமையில், ஜிஎல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும ஆகியோர் பொதுஜன பெரமுனவின் சார்பிலும்,
மஹிந்த அமரவீர தலைமையில் தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளனர்.
முன்னர் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இழுபறி நிலை காணப்பட்டதை அடுத்து, பொதுஜன பெரமுனவின் சார்பில் பசில் ராஜபக்ச தலைமையில் இன்றைய பேச்சு இடம்பெறவுள்ளது.
இன்றைய பேச்சில் இணக்கப்பாடு எட்டப்பட்டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் சந்தித்து, கூட்டணியை அமைப்பதற்கான இறுதி நிபந்தனைகள், இணக்கப்பாடுகளை எட்டுவார்கள் என, சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
“கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து இன்றைய பேச்சில் முக்கிய கவனம் செலுத்தப்படும். எனினும் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பது தொடர்பாக கட்சி இன்னமும் முடிவெடுக்கவில்லை“ என்றும் அவர் கூறினார்.
அதேவேளை இன்றைய சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு, சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது குறித்து ஆராயப்படும் என்று அந்தக் கட்சியின் பிரதிநிதிகளில் ஒருவரான ஜிஎல்.பீரிஸ் தெரிவித்தார்.
“இரண்டு கட்சிகளும் ஒத்த கொள்கைகளைக் கொண்டுள்ள நிலையில், எவ்வாறு கோட்டாபய ராஜபக்சவை வெற்றியடையச் செய்வது என்பது குறித்து கலந்துரையாடப்படும். விரைவில் ஜனாதிபதியும், கோட்டாபய ராஜபக்சவும் சந்தித்துப் பேசுவார்கள்.” என்றும் அவர் கூறினார்.
கருத்து தெரிவிக்க