மஸ்கெலிய எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் நேற்று மாலை முதல் முச்சக்கரவண்டிகளை நிறுத்த வேண்டாம் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவது முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மஸ்கெலிய பிரதேச சபைக்கு சொந்தமான விளம்பர பலகை ஒன்று நேற்று முன்தினம் இரவு இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
அதற்கு முச்சக்கரவண்டி சாரதிகளே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று மஸ்கெலிய பிரதேச சபை தவிசாளர் சந்தேகித்தே இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து நேற்று மாலை மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் அந்த கலந்துரையாடலில் குறித்த இடத்தில் இனிமேல் முச்சக்கரவண்டி நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 வருட காலமாக குறித்த இடத்தில் முச்சக்கரவண்டி நிறுத்தி தங்கள் பிழைப்பை நடாத்தி வருவதாகவும் விளம்பர பலகை சேதமாக்கப்பட்டதற்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று முச்சக்கரவண்டி சாரதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காவல் துறையினரால் கொடுக்கப்பட்ட அறிவித்தலை தொடர்ந்து குறித்த தரிப்பிடத்தை முச்சக்கரவண்டி சாரதிகள் அவர்களாகவே அத்துமீறி அதே இடத்தில் உள்ள சிறிய இடம் ஒன்றில் தரிப்பிடத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று தமக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க