உள்நாட்டு செய்திகள்புதியவை

அரபு நாடுகள் புறக்கணிப்பு: அசாத்சாலி குற்றசாட்டு

அரபு நாடுகளை அரசாங்கம் புறக்கணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் இலங்கையில் குறைவடைந்து சுற்றுலா பயணிகளின் வருகை யை அதிகரிக்க 48 நாடுகளுக்கு 6 மாத இலவச விசா வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நாடுகளின் பட்டியலில் அரபு நாடு ஒன்றுக்கேனும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அத்துடன் பெயரிடப்பட்டிருக்கும் 48 நாடுகளும் எமது நாட்டை சூறையாட உதவி செய்த நாடுகளாகும்.

அரபு நாடுகள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் கல்விக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாரியளவில் உதவி செய்திருக்கின்றன. அந்த நாடுகள் ஒன்றின் கூட பெயர் இடம்பெறாமல் இருப்பது, அரபு நாடுகளை விரக்திக்குள்ளாக்கும் செயலாகும்.

குறிப்பாக சவூதி அரேபியா நாட்டின் பல்வேறு அபிவிருத்திகளுக்காக 4ஆயிரத்து 800 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு உதவியாக வழங்கி இருக்கின்றது.

அதேபோன்று குவைத் அரசாங்கம் தென் கிழக்கு பல்கலைக்கழகத்துக்காக 800 மில்லியன்களை வழங்கியுள்ளது.

டுபாய் அரசாங்கம் ஆயிரம் டொலர் மில்லியனுக்கும் அதிகமாக உதவி செய்திருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் அரபு நாடுகளை புறக்கணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விரைவில் அரசாங்கம் இந்த பிழையை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க