மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் தலையிடுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த உடன்பாட்டின் சில உட்பிரிவுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கவலைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த உடன்பாட்டுக்கு அனுமதியளிக்க மறுத்திருந்தார்.
முன்மொழியப்பட்டுள்ள உடன்பாட்டில் சில சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் தொடர்பாக, அவசர கடிதத்தில், அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த உடன்பாடு வெளிப்படையானது என்றும், இலங்கை மக்களுக்கு செழிப்பை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் உள்ள இலங்கை அதிபர், பத்தாண்டுகளாக இலங்கையின் வளர்ச்சியில் அமெரிக்காவின் முதலீடுகளின் பங்களிப்பு குறித்து நன்கு அறிந்திருப்பார் என்பதையும் அமெரிக்க தூதுவர் தனது கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.
இந்த உடன்பாட்டின் மூலம் வழங்கப்படவுள்ள 480 மில்லியன் டொலர் அமெரிக்க மக்களிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கும் ஒரு பரிசு என்றும் அது கடன் அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் மிலேனியம் சவால் நிதியத்தின் கொடையினால் ஏற்படக் கூடிய பயன்கள் குறித்தும், அதில் எந்த தலையீடுகளும் இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க