உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு: பிராண்டிக்ஸ் நிறுவனத்துடன் -நைற்றா ஒப்பந்தம்

இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாக பிராண்டிக்ஸ் நிறுவனத்துடன் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின்((NAITA) National Apprentice and Industrial Training Authority) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நைற்றா நிறுவனத்தின் தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அதனடிப்படையில் வியாழக்கிழமை 18.07.2019 காலை பிராண்டிக்ஸ் (Brandix) என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நைற்றாவின் தலைமையக கேட்போர் கூடத்தில் நடந்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (நைற்றா) தலைவர் பொறியியலாளர் நஸிர் அஹமட், பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் மனிதவள தலைமை அதிகாரி இஷான் தந்தனாராயண ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இதன் பிரகாரம் தற்போது பல்வேறு தொழில்துறைகளில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு NVQ-3> NVQ-4 சான்றிதழ்களை NVQ RPL இன் கீழ் வழங்க பிராண்டிக்ஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் பட்டதாரிகள், டிப்ளோமா பாடநெறி, உயர் டிப்ளோமா பாடநெறிகளை பூர்த்தி செய்த வர்களுக்கு அந்தந்த துறை சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன் மூலமாக மூன்று முக்கிய அம்சங்கள் செயலுருவம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நைற்றா நிறுவனத்தின் தலைவர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.

பயிற்சிகூடங்களை நிறுவுதல், தொழில்நுட்ப பயிற்சி நெறிகளில் புதிய அம்சங்களை உள்வாங்குதல், பயிற்சிக்குப் பின்னர் கட்டயமாக தொழில்வாய்ப்புகள் கிடைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குதல் போன்ற பிரதான அம்சங்களை கருத்தில் கொண்டே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கைச்சாத்திடும் நிகழ்வில், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் உப தலைவர் ஹிமாலி ஜினதாச, தலைமை பணிப்பாளர் ரோஹன் றொட்ரிக்கோ, நிர்வாகப் பணிப்பாளர் சுமேதா ஜயசிங்ஹ ஆகியோரும் பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் மனிதவள சிரேஸ்ட மேலாளளர் ரவின் ஜெயசுந்தர, சிறப்பு திட்ட மேலாளர் மாலிகா சமரவீர, மனிதவள உதவி மேலாளர் காமினி கடவதராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர். ‪

கருத்து தெரிவிக்க