உள்நாட்டு செய்திகள்

திருக்கேதீஸ்வரம் கலந்துரையாடல் ஒத்திவைப்பு!

திருக்கேதீஸ்வரம் விவகாரம் குறித்து நாளை (13) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

” திருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு அமைப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் மன்னார் மாவட்ட செயலகத்தில், அனைத்து தரப்பினரும் கலந்துக்கொள்ளும் கலந்துரையாடல் நாளை (13) மன்னார் மாவட்ட செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு இரு தரப்பு மத தலைவர்கள், ஆலய பிரதிநிதிகள், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பிரதேச சபை தலைவர் உட்பட அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ  வெளிநாடு சென்றுள்ள காரணத்தால், நடைபெற இருந்த கலந்துரையாடலை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரே இந்த கோரிக்கையை விடுத்தனர்.

மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ கலந்துக்கொள்ளாமல், இந்த பேச்சுவார்த்தை ஒருபோதும் பலனளிக்க போவதில்லை. ஆகவே அவர் வரும் வரை பேச்சுவார்த்தையை ஒத்திவைக்கும்படி  விடுத்துள்ள கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கின்றேன்.” என்றும் மனோ கணேசன் கூறினார்.

 

 

கருத்து தெரிவிக்க