உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஆகஸ்ட் நடுப்பகுதியில் டில்லி பறக்கிறது கூட்டமைப்பு!

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பினர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் டில்லிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என்றும், இதற்கான ஏற்பாடுகளை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் முன்னெடுத்துவருவதாகவும் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் திட்டத்துக்கு என்ன நடந்தது என்பன தொடர்பில் இம்மாதம்  25, 26 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது.

மேற்படி விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினதும் , தென்னிலங்கை அரசியல் கட்சிகளினதும் உறுதியான நிலைப்பாடுகளை அறியும் நோக்கிலேயே விவாதத்துக்கான கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் சபாநாயகரிடம் முன்வைத்தது.

எனவே, இவ்விவாதம் முடிவடைந்த பின்னரே ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில்  விசேட அறிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு டில்லி நோக்கி பயணமாகும் எனவும் தெரியவருகின்றது.

இலங்கைக்கு குறுகிய கால பயணத்தை மேற்கொண்டிருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் வைத்து சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு  உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார்.  அத்துடன், டில்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க