இன்று பெனும்பிரல் (புறநிழல் கிரகணம்) சந்திர கிரகணம் அமெரிக்க, ஆபிரிக்க நாடுகளில் பெரிதாக தெரிந்தது.
இந்த ஆண்டு ஜனவரி 10 , ஜுன் 5 ஆம் திகதிகளில் சந்திர கிரகணம் தென்பட்டது. அதே போல் ஜுன் 21 ஆம் திகதி சூரிய கிரகணம் தோன்றியது. இன்று மீண்டும் சந்திர கிரகணம் தென்பட்டதை அடுத்து, கடந்த ஒரு மாத இடைவெளியில் 3 கிரகணம் நடந்துள்ளது மிகவும் அரிய நிகழ்வு என , விஞ்ஞானிகள், வானியல் ஜோதிட வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று நிகழ்ந்த பெனும்பிரல் ( புறநிழல் கிரகணம்) என்றழைக்கப்படும் சந்திர கிரகணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழும்.
இந்த கிரகணத்தின் போது , சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருப்பதில்லை. கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில் பூமியின் புறநிழல் மட்டுமே சந்திரன் மீது விழும்.
சந்திர கிரகணத்தின் அதி உச்ச கட்டத்தின் போது, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் வழமையான பௌர்ணமியை விட சந்திரன் இருண்டதாக தோன்றியுள்ளது.
தெற்கு, மேற்கு ஐரோப்பா, ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், வட அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பகுதிகள், தென் அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், போன்ற இடங்களில் தெரிந்துள்ளது.
அடுத்த சந்திர கிரகணம் நவம்பர் 29, 30 ஆம் திகதிகளில் தென்பட இருக்கிறது. இது ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்காவில் தெரியும்.
கருத்து தெரிவிக்க