உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஞானசார தேரரின் விடுதலைக்கு எதிராக எக்னலிகொடவின் மனைவி மனுத் தாக்கல்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தமைக்கு எதிராக காணாமலாக்கப்பட்ட பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட அடிப்படை மனித உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற நிலையில் எவ்வாறு ஞானசார தேரர் வெளிநாடு செல்ல அனுமதி பெற்றார் என்கிற கேள்வியையும் சந்தியா எக்னலிகொட எழுப்பியுள்ளார்.
படவிளக்கம்
தென்னிலங்கையின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட விவகார வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றபோது, அத்துமீறி நுழைந்து ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொடவை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 08ஆம் திகதி இந்த வழக்கை விசாரணை செய்த ஹோமாகம நீதிமன்றத்தின் அப்போதைய நீதவாக் ரங்க திஸாநாயக்க, அவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடந்த மே 23ஆம் திகதி ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.
பாதிக்கப்பட்டவரான சந்தியா எக்னலிகொடவின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் ஞானசார தேரருக்கு விடுதலை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சந்தியா எக்னலிகொட, ஸ்ரீலங்கா அரச தலைவரின் இந்த செயற்பாட்டை எதிர்த்து அடிப்படை மனித உரிமைமீறல் மனுவை தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க