உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

அரசின் அச்சாணி கூட்டமைப்பு வசம்! வேலுகுமார் எம்.பி ஆலோசனை

“தலைக்குமேல் வெள்ளம்வந்த பிறகு அணைக்கட்டும் அரசியலைக் கைவிடுத்து நடைமுறைக்காரணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழிப்பாகவே இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தீர்வுதிட்ட விடயத்தில் இலவுகாத்த கிளியின் நிலைமையே ஏற்படும்.’’

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம், அரசியல் தீர்வுத் திட்ட முயற்சிகள் தொடர்பில் இன்று (21) கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“ இனப்பிரச்சினை தலைவிரித்தாடியபோது அதற்கான தீர்வாக இந்தியாவின் தலையீட்டுடன் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.

எனினும், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்ட அதிகாரங்கள் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.

பேரினவாதிகளின் எதிர்ப்புகளுக்கு ஆப்புவைத்துவிட்டு சிங்கள மக்களின் ஆணையுடன் அதிகாரங்களைப் பெறுவதற்கு கூட்டமைப்பு அரசியல் ரீதியில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. ஆட்சிமாற்றம் வந்தபின்பு தீர்வு கிடைக்கும் என கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

ஆனால், புதிய அரசியலமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை. அதை உருவாக்கும் முயற்சிகள் கிடப்பில்போடப்பட்டுள்ளன. அரசின் அச்சாணி கூட்டமைப்பு வசமே தற்போது இருக்கின்றது.

கூட்டமைப்பு ஆதரவை விலக்கினால் சாதாரணப்பெரும்பான்மையைக்கூட அரசாங்கம் இழந்துவிடும்.

இப்படியான சூழ்நிலையில்கூட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

புதிய அரசியலமைப்பு என்பது கடினமான இலக்காக இருந்தாலும், ஏனையற்றை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக கல்முனை விவகாரத்தை எடுத்துக்கொண்டால் அதை முன்னரே வெற்றிகரமாக செய்துமுடித்திருக்கலாம். ஆனால், தலைக்குமேல் வெள்ளம் வந்த பின்னரே தீர்வுக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எமக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது. இதன்காரணமாகவே யதார்த்தத்தை உரிமையுடன் சுட்டிக்காட்டுகின்றோம். கூட்டமைப்பு துணிந்து நின்று களமாடினால் அதற்கு நாமும் நேசக்கரம் நீட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க