உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மகாவலி திட்டத்தினால் வடக்குகிழக்கு மக்களுக்கு தீமையே ஏற்பட்டுள்ளது

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் வாராந்தம் ஒருமுறை வழங்கும் கேள்வி ஒன்றுக்கான பதிலை கீழே தருகிறோம்:-

கேள்வி: மகாவலி திட்டத்தால் வடகிழக்கு மக்;களுக்கு தீமையே ஒழிய நன்மை எதுவும் கிடைக்கவில்லை என்று பொருள்பட நீங்கள் தெரிவித்துள்ளீர்கள். அதன் அர்த்தம் என்ன?

பதில்: இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களின் பின்னணியில் மூன்று பிரதான காரணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை எம் மக்கள் புரிந்தும் புரியாது வாழ்ந்து வந்துள்ளனர். அவையாவன –

1. தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த வடகிழக்கின் நில அபகரிப்பு

2. வடக்கு, கிழக்கில் குடிசன பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துதல்.

3. தமிழ் மக்களின் தாயக கோட்பாட்டை சிதைக்கும் வகையில் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் மக்களின் தொடர்ச்சியான நிலப்பரப்பை குறுக்கே சிங்கள மக்களை நுழைத்து குடியேறச் செய்து துண்டாடுதல்.

இவற்றை ஓரளவு புரிந்து கொண்ட தமிழ் அரசியல் தலைவர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கங்கள் மேற்கொண்ட இத்தகைய திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகள் எம்மவர்கள் அஞ்சியபடியே பாரிய விளைவுகளை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தின.

இதே போலத்தான் தற்போதும் மகாவலி திட்டத்துக்கு ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் குடியேற்ற நடவடிக்கைகள் வடக்கில் தமிழ் மக்களின் குடிசன பரம்பலில் செயற்கையான மாற்றத்தை ஏற்படுத்தப்போவதுடன் மிக விரைவில் எமது தாயகமான வடக்கும் கிழக்கும் துண்டாடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களைப் போலவே எமது போராட்டங்கள் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க இந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் வகையில் நாம் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.

ஏனென்றால், எந்த சிங்கள கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எமது தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்கள மயமாக்கும் அவர்களின் திட்டம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கப்போகின்றது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பிரதான கட்சிகளுமே, தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் செயற்பாடுகளில் ஏட்டிக்குப் போட்டியாகவே செயற்பட்டு வந்திருக்கிறமை வரலாறு. ஒரு கட்சி மலைப்பாம்பு என்றால், மற்றைய கட்சி விஷப்பாம்பு என்பதே யதார்த்தம். ஒன்று விழுங்கும். மற்றையது நின்று கொல்லும்.

கடந்த 5 வருடங்களில் நல்லாட்சி என்ற முகமூடி அணிந்த இந்த இரண்டு பாம்புகளும் ஒன்று சேர்ந்த ஆட்சியில் தான் ஆயிரக்கணக்கான எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வடக்கில் ஒரு சில இடங்களில் இராணுவத்தை பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேற்றிவிட்டு ஆயிரக்கணக்காண எமது காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுவருகின்றன.

கடந்த சில வருடங்களில் மகாவலி திட்டம் மூலம் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஏனைய பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் நில அபகரிப்பும் சிங்கள குடியேற்றத் திட்டங்களும் முனைப்படைந்து வந்திருக்கின்றன. அதேவேளை, வன இலாகா திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் நில அபகரிப்புக்களுக்கும் துணைபோகும் வகையில் செயற்பட்டு வந்துள்ளன.

பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் காணிகளை அபகரித்து அவற்றில் இராணுவம் வியாபாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. கடல் பிரதேசங்களில் கடற்படையினரின் ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. மீனவர்களின் மீனவ வாழ்க்கை பாதிப்புக்கு ஆளாகி வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக 2019 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 679 ஏக்கர் தனியார் காணிகளும் 3178 ஏக்கர் அரச காணிகளும் படையினர் வசம் உள்ளன. ஆனால் மேலதிகமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவம் தனது முகாம்களுக்காகவும் குடியிருப்புக்களுக்காகவும் கைவசப்படுத்தி வைத்திருக்கிறது என்று அறியமுடிகின்றது.

இவை கணக்கில் சேர்க்கப்படவில்லை. உதாரணத்திற்கு திருமுருகண்டி கோவிலின் முன்னிருக்கும் யு9 வீதியின் அடுத்த பக்கத்தில் 1702 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருந்து வருகின்றது. அது பற்றி கணக்கில்லை.

2017 ஆம் ஆண்டு “அடையாளம்”; ஆய்வு நிலையம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் 30,000 ஏக்கர் காணி மட்டில் இராணுவத்தினால் முல்லைத்தீவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் முல்லைதீவில் வன இலாகா, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவலி மற்றும் இராணுவம் ஆகியவற்றினால் மொத்தமாக கைவசப்படுத்தப்பட்டுள்ள நில அளவு 80,000 ஏக்கருக்கும் மேல் என்று சொல்லப்படுகின்றது. அவர்கள் கைவசம் இருக்கும் பல இடங்கள் பற்றி தரவுகள் பெற படையினர் எதிர்ப்பு தெரிவித்தும் பயமுறுத்தியும் வருகின்றனர். ஒரு பௌத்தர் கூட நிரந்தரமாக வாழாத வட்டுவாகலில் பழம்பெரும் ஆலயமான சப்த கன்னிமார் ஆலய வளாகத்தை இராணுவம் இன்று அபகரித்து பௌத்த விகாரை ஒன்றை அமைத்துள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி மன்னார் மாவட்டத்தில் 12,154 ஏக்கர் காணியை வன விலங்குகள் திணைக்களமும், 12,275 ஏக்கர் காணிகளை வன இலாகாவும் கைவசப்படுத்தியுள்ளன. இவை தவிர இராணுவம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஆகியனவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைத் தம் வசம் வைத்துள்ளன.

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய தமிழ் மாவட்டங்களை நில ரீதியாக இணைக்கும் மணலாறு மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடியேற்ற திட்டங்கள் மூலம் மிக விரைவில் எமது வடக்கு கிழக்கு தாயக கோட்பாடு உடைத்தெறியப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது நடைபெற வசதியளித்த ஒரேயொரு காரணம் என்ன? மாகாவலித்திட்டம்! வடக்கு கிழக்குக்குத் தண்ணீர் தரப்போகின்றோம் என்று ஆசைகாட்டி ஒரு சொட்டு மகாவலித் தண்ணீரை இதுவரை தராமலே எமது காணிகளைக் கபளீகரம் செய்து வருகின்றனர். உண்மையில் மகாவலிநீர் வடக்கிற்கு வராது என்பதே தகைமைபெற்ற எமது எந்திரிகளின் கருத்து. பாரிய மரக்குதிரையை பரிசாகத் தந்து கிரேக்க போர்வீரர்கள் ட்ரோய் நகரத்தினுள் உள்நுழைந்து விட்டனர்! இப்பொழுதுதான் எம்முட் சிலர் விழித்துக் கொண்டுள்ளனர்.

சவால்களை இனி சமாளிக்க வேண்டிவரும் என்று “புதிய” கருத்துக்களை ஓட்டப்பந்தயத் திடல்களில் இருந்து கூறி ஒப்பாரி வைக்கின்றனர். 2016ல் தீர்வு வரும், 2017ல் தீர்வு வரும், 2018ல் தீர்வு வரும் என்று கூறியபோது வராது என்றோம். எம்மை அரசியல் ரீதியாக அன்று தாக்கியவர்களுக்கு இன்று ஓட்டப்பந்தயத் திடல்களில் திடீர் ஒளியேற்றம் கிடைத்துள்ளது. இப்பொழுது தான் சவால்கள் திடீரென அவர்கள் கண்களுக்குப் புலப்படத் தொடங்கியுள்ளன.

எமது இனம் இன்று மட்டுமல்ல கடந்த 10 வருடங்களாக மிகவும் இக்கட்டான ஒரு நிலையில் நின்று கொண்டிருக்கின்றது. கடந்த 30 வருட கால யுத்தத்தில் இழந்தவற்றை விடவும் எமது இருப்புக்கான அடிப்படைகளை வேகமாக நாம் இந்த பத்து வருடகாலத்தில் இழந்துகொண்டிருக்கின்றோம். எமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளுக்கான அடித்தளங்கள் திட்டமிட்டவகையில் சிதைக்கப்பட்டு வருகின்றன.

நிலைமை கட்டுமீறி செல்வதற்கு முன்னர் நாம் சுதாகரித்துக் கொள்ளவேண்டும். மாற்று நடவடிக்கைகளில் ஈடபடவேண்டும்.

மறைந்த பொருளியலாளர் வரதராஜன் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, 1901 -2012 ஆம் (2012 க்கு பின்னர் குடித்தொகை மதிப்பீடு செய்யப்படவில்லை) ஆண்டுகளுக்கு இடையிலான கிழக்கு மாகாண சனத்தொகை மதிப்பீட்டை ஆய்வு செய்கின்றபோது அதன் மொத்த சனத்தொகை 6 மடங்காக அதிகரித்துள்ளது (96,926 வழ 617,295) என்று காணப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் சிங்கள மக்களின் சனத்தொகை 41 மடங்கினால் அதிகரித்துள்ளது (8,778 வழ 359,136). இது கிழக்கு மாகாண குடித்தொகை பரம்பலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 1901 ஆம் ஆண்டு 55. 8 சதவீதமாக இருந்த தமிழ் மக்களின் சனத்தொகை 2012 ஆம் ஆண்டு 39.7 சத வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேவேளை, சிங்கள மக்களின் எண்ணிக்கை 1901 இல் 5.1 சத வீதமாக இருந்து 23.2 சதவீதமாக இன்று அதிகரித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில், 1827 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி 18,000 க்கும் அதிகமான தமிழ் மக்களும் 250 சிங்கள மக்களும் வாழ்ந்துள்ளனர். 1827- 1921 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள மக்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 5 சத வீதத்தைக் கூடத்தாண்டவில்லை. 1911 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு தகவல்களின்படி, திருகோணமலையின் கட்டுக்குளம் மேற்கு பிரிவின் சில உட்புற கண்டிய கிராமங்களிலேயே சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 197 ஆகவே இருந்தது.

திருகோணமலையின் ஏனைய பிரிவுகளான தம்பலகாமம், திருகோணமலை நகரம் மற்றும் கொட்டியார் பற்று ஆகிய இடங்களில் 1911 ஆம் ஆண்டில் 98 சத வீதம் ( 23, 000 க்கும் அதிகம்) தமிழ் பேசும் மக்கள் இருந்துள்ளனர். தம்பலகாமம் பற்று பிரிவில் முஸ்லிம்கள் அதிகளவில் இருந்துள்ளனர்.

இதன் மூலம், திருகோணமலையின் கட்டுகுளம் மேற்கு பிரிவு தவிர, ஏனைய இடங்கள் 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் ஏறத்தாழ முழுமையாக தமிழ் பேசும் மக்களின் இடங்களாகவே இருந்துள்ளன. ஆனால், 1948 ஆம் ஆண்டின் பின்னர் அரசாங்கம் மேற்கொண்ட மூன்று பிரதான நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் (கந்தளாய் குளம்- 1948, அல்ல குளம்-1953, பதவியா குளம் -1958) சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டு இந்த குடிசன பரம்பலில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50,000 க்கும் அதிகமான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் இந்த நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சிங்கள மக்கள் பெரும்பான்மையாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

பின்னர் 1961ல் இல் மொறஃவெவ (தமிழில் முதலிக் குளம்) என்ற நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் திருகோணமலை நகரத்துக்கு மேற்காக 24 கிலோ மீற்றர்கள் தொலைவில் மொறஃவெவ குடியேற்றத் திட்டம் அமைக்கப்பட்டு வேறு இடங்களில் இருந்து சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். இது பின்னர் தனியான பிரதேச செயலகமாக பிரிக்கப்பட்டது. 2012ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் படி மொறஃவெவ பிரதேச செயலர் பிரிவில் 72.3 சத வீதமானோர் சிங்களவர்கள்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் திருகோணமலையின் குடிசன பரம்பலில் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1901 – 2012 காலப்பகுதியில், திருகோணமலையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை 17069 இல் இருந்து 122080 ஆக அதிகரித்த அதேவேளை, சிங்கள மக்களின் எண்ணிக்கை 1203 இல் இருந்து 101991 ஆக அதிகரித்தது. இது தமிழ் மக்களை பொறுத்தவரையில் 7.15 மடங்கு அதிகரிப்பாகவும் சிங்கள மக்களை பொறுத்த வரையில் 84.78 மடங்கு அதிகரிப்புமாகும். இதன் காரணமாக 1901 ஆம் ஆண்டு மொத்த சனத்தொகையின் கிட்டத்தட்ட 60 சத வீதமாக இருந்த தமிழ் மக்களின் சனத்தொகை 2012 இல் 32. 8 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதேவேளை, சிங்கள மக்களின் எண்ணிக்கை இதே காலப்பகுதியில் 4.2 சத வீதத்தில் இருந்து 27 சத வீதமாகவும் முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை 29 சத வீதத்தில் இருந்து 40 சத வீதமாகவும் அதிகரித்துள்ளது.

இந்த புள்ளிவிபரங்கள் தற்போதைய நிலைமைகளை விளக்க தரப்பட்ட தரவுகள். ஆனால் வடக்கு கிழக்கில் முழுமையான ஆய்வின் பெறுபேறுகள் வெளியிடப்பட வேண்டும். பல வருடங்ளுக்கு முன்னர் சிங்கள புத்திஜீவிகளும் முஸ்லீம் புத்திஜீவிகளும் மேற்கொண்ட ஆய்வுகளை இப்பொழுதாவது எமது புத்திஜீவிகள் பொறுப்பாக மேற்கொள்ள வேண்டும்.

சிங்களத் தலைவர்களும், முஸ்லீம் தலைவர்களும் ஒற்றுமையாகச் சிந்தித்துத் தமது மக்களின் நலனைப் பேண நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளனர். அவர்கள் தமது புத்திஜீவிகளின் முடிவுகளை ஆராய்ந்து வேண்டுவனவற்றை நடைமுறைப்படுத்தி தமது இன நலன்களை மேம்படுத்தி வந்துள்ளனர்.

கேவலம் கல்விக்குப் பெயர்போன எமது தமிழ்த் தலைவர்கள் முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டு காலந்தள்ளி வந்துள்ளனர். எமது அரசியல்வாதிகளின் இன்றைய பேச்சுக்களைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. எமது நிலங்கள் பறிபோகின்றன. இளைஞர்கள் வெளிநாடு நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். எமது மக்கட் தொகை வெகுவாகக் குறைந்து வருகின்றது. இங்கிருப்பவர்கள் வாள்வீச்சிலும் வலிமைமிக்க போதைப்பொருள்களிலும் நாட்டம் காட்டி வருகின்றார்கள். நாங்கள் யதார்த்தத்தை மறந்து விட்டு முட்டாள்த்தனமான விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

அறிவுள்ள திறமையுள்ள எம் தமிழ் இனம் எங்கே? என்ன நடந்தது எமக்கு? எமக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துக்களைப் புரிந்துகொண்டுதான் இவை குறித்து கவலை கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஓரணியில் சேர்ந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை அண்மைக் காலமாக நான் வலியுறுத்தி வருகின்றேன்.

ஆனால் எம்மவர்கள் கட்சி நலம் பற்றியும் தமது சொந்த நலன்கள் பற்றியும் சிந்திக்கும் அளவுக்கு மக்கள் நலனில் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. இனியாவது எமது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மிகவும் நேர்மையாகவும் விஸ்வாசமாகவும் தமிழ்ப் பற்றுடனும் இனப் பற்றுடனும் செயற்பட முன்வர வேண்டும். சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து மகாவெலித் திட்டம் எமக்கு வேண்டாம் என்று கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி,
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்

கருத்து தெரிவிக்க