பிரதேச சபையை ஒரே இரவில் மாநகரசபையாக தரம் உயர்த்தி மாற்ற முடியுமென்றால் 35 வருடகாலமாக கோரி வருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஏன் தரம் உயர்த்த முடியாது எனக் கேள்வி எழுப்பியிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, கல்முனை உப பிரதேச செயலகத்தை உடனடியாக பிரதேச செயலகமாக தரம் உயர்த்த வேண்டுமென்று கோரியுள்ளது.
கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
யாழ். பருத்திதுறை வீதியின் கட்டப்பிராய் சந்தியிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய அவசர ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனையிலுள்ள் உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்துமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 35 வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற இக் கோரிக்கை முஸ்லீம் தலைமைகள் அல்லது முஸ்லீம் மக்களின் எதிர்ப்புக்களால் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
இவ்வாறு முஸ்லீம் தரப்புக்களின் அழுத்தம் காரணமாக அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொது பாரியளவிலான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்தும் அபகரித்தும் முஸ்லீம் குடியேற்றங்கள் அல்லது கிராமங்களை உருவாக்குவதற்காகவே முஸ்லீம் தரப்புக்கள் இதற்குத் தடையாக இருக்கின்றன.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலுமான 21 தமிழ்க் கிராமங்கள் முஸ்லீம் கிராமமாக மாறியிருக்கின்றன.
இவ்வாறு கிராமங்களை மாற்றியும் காணிகளை ஆக்கிரமித்தும், மதத் தலங்களை அகற்றியும் குடியேற்றங்களைச் செய்த பள்ளிவாசல்களைக் கட்டியிருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான ஹிஸ்புல்லா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.
இதனால் தமிழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய இந்தப் பிரதேசத்தில் உள்ள உப அலுவலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்த விடாமல் முஸ்லீம்கள் தடுக்கின்றனர்.
அரசாங்கம் நினைத்தால் இதனை உடனடியாகச் செய்யலாம். எனவே உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை அல்லது குரல்களை கூட்டமைப்பினர் கொடுக்க வேண்டும். வெறுமனே பார்வையாளர்களாக இருப்பதை கூட்டமைப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.
கருத்து தெரிவிக்க