உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோட்டாபயவுக்கு எந்த அடிப்படைத் தகைமையும் கிடையாது – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான அடிப்படைத் தகைமைகள் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என்று அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் பிரதான கட்சிகளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பாக தாம் போட்டியிடுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாகவே இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இதற்காக தனது அமெரிக்கக் குடியுரிமையையும் இரத்து செய்வதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசப்பட்டது.
இதன்போது உரையாற்றிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய தமது இரட்டைக் குடியுரிமையை நீக்கிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்பினார்.

கருத்து தெரிவிக்க