உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறை! – மஹிந்த அமரவீர

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஸ்ரீலங்காவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பினை தீவிரப்படுத்துவதற்காக அவசர காலச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.
அத்தோடு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் எதிரொலியாக முஸ்லிம் கிராமங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னரும் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
போர்க் காலத்தின் பின்னர் நீக்கப்பட்ட இந்த அவசர காலச்சட்டம் 10 வருடங்களுக்குப் பிறகு கண்டி திகன பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை அடுத்து அமுல்படுத்தப்பட்டு பின்னர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, அவசர காலச்சட்டம் இறுதியாக ஒருதடவை மாத்திரம் நீடிக்கப்படும் என்றும் மிகவிரைவில் இந்த அவசரகாலச் சட்டம் இரத்து செய்யப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

கருத்து தெரிவிக்க