உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தவறான செய்தி அறிக்கை சட்டமூலத்தை பகிரங்கப்படுத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை

தவறான செய்தி அறிக்கை சட்டமூலத்தை பகிரங்கப்படுத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை

சுதந்திர ஊடக இயக்கம் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த இயக்கம் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் இங்கே தரப்படுகிறது.

————————
ஜூன் 17, 2019

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
கௌரவ திருமதி தலத்தா அத்துகோரல,
உயர் நீதிமன்ற வளாகம்,
கொழும்பு 12.

கௌரவ அமைச்சர்

தவறான செய்தி அறிக்கைகள் மற்றும் வெறுக்கத்தக்க கட்டுரைகள் தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள்

சகவாழ்வு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான செய்தி வெளியீடு மற்றும் வெறுப்பு பேச்சு ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை திருத்துவது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அறியமுடிகிறது.

தேசிய பாதுகாப்பு குறித்த பிரிவுக் குழுவின் கோரிக்கையின் பேரில் அமைச்சரவைக்கு இந்த முன்மொழிவை உங்களது அமைச்சு சமர்ப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

உண்மைக்குப் புறம்பான செய்திகள் மற்றும் வெறுப்புரைகள் நாட்டில் தற்போது பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது என்பதையும் அவற்றை தடுப்பதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும் என்பதுவும் சுதந்திர ஊடக இயக்கத்தின் நிலைப்பாடாகும்.

எனினும், இது தொடர்பாக சில சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்பதையும், அச்சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதையும், அடிப்படையின்றி பல்வேறு தரப்பினரின் அவசியத்துக்கேற்ப அவை பயன்படுத்தப்படுவதையும் சுதந்திர ஊடக இயக்கம் அவதானித்து வருகிறது.

உதாரணமாக, சக்திக சத்குமார என்ற எழுத்தாளர் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு இரண்டரை மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் இருக்கின்றார்.

மேலும் பத்திரிகையாளர் குசல் பெரேரா எழுதிய செய்தித்தாள் கட்டுரையின் தொடர்பாக அதே சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மேலும், முன்மொழியப்பட்ட புதிய சட்டம் குறித்து இதுவரை முறையாக தெளிவுபடுத்தப்படவில்லை,

ஒரு செய்தி உண்மைக்கு முரணானது அல்லது வெறுக்கத்தக்கதா என்பதை தீர்மானிப்பது யார்? அதற்கான தகுதிகள் என்ன? இதற்குள் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை மீறாமால் இருப்பதற்கான நடைமுறைகள் யாவை? இவை அனைத்தும் கடும் பிரச்சினைகளாகவே உள்ளன.

இந்த பின்னணியில், முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டம் திருத்தம் இந்நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது.

எனவே, இந்த சட்ட திருத்தம் தொடர்பாக நாட்டிற்கு உடனடியாக ஒரு முறையான விளக்கத்தை கொடுக்கும்படியும் உங்களுடன் கலந்துரையாட எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவும் நான் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

விரஞ்சன ஹேரத்
ஒருங்கிணைப்பாளர்
சுதந்திர ஊடக இயக்கம்

பிரதிகள்:
01. கௌரவ ருவன் விஜேவர்தன – வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர்
02. தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு
03. அனைத்து ஊடகங்களுக்கும்

கருத்து தெரிவிக்க