தமிழகத்தில் இருந்து குணா
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஏழாமிட சனியின் தாக்கத்தை ஒரு திரைப்பட நடிகரின் வாழ்க்கை வாயிலாக சென்ற இதழில் பார்த்தோம்! இம்முறை ‘அஷ்டம சனி’யின் பலன்களைப் பார்ப்போம்.
வடமொழியில் ‘அஷ்டமம்’ என்று அழைக்கப்படுவது வேறு ஒன்றுமில்லை. ‘எட்டு’ என்பதையே அப்படி கூறுகிறார்கள்.
இந்த எட்டாமிடம் சனிக்கு சாலப் பொருத்தம் என்றால் அது மிகையில்லை!
ஜோதிடத்தில் எட்டாமிடம் என்றால், ‘எண் கணித ஜோதிடத்தில்’ எட்டு என்ற எண்ணே சனி பகவானுக்கு உரியது! அதனால்தான் எட்டம் எண்ணைக் கண்டால் எமனைக் கண்டது போல பலரும் அலறுகிறார்கள்!
எட்டாம் எண் அப்படியொன்றும் தீமை செய்துவிடாது என்றும்,
இன்னும் சொல்லப்போனால் சிலருக்கு பெருத்த யோகத்தையும் கூட செய்யும் என்று எட்டுக்கு ஆதரவாக ஓட்டுப் போடும் எண்கணித நிபுணர்கள்கூட உண்டு. ஆனால் எட்டாம் எண்ணுக்காக பரிந்து பேசும்
இவர்கள்கூட, பெயர் எண்ணில் ‘எட்டு’ வந்தால் பதைத்து
போவார்கள்! உடனே பெயரை மாற்றும் வேலைகளில் இறங்கி
விடுவார்கள். அப்படியெல்லாம் ஜாதகக் கட்டத்தில் எதையும்
மாற்ற முடியாது. பிறப்பின் வழியே வந்த விதி, முற்பிறப்பு பலன்களின்
சூட்சுமம் என்றாகிற போது இங்கே எதை மாற்ற முடியும்.
வெறும் பெயர் மாற்றத்தால் வெற்றி கிடைத்துவிடும் என்றால்
திறமையுள்ளவர்கள், தங்கள் தொடர் முயற்சியால் காலத்துடன்
சண்டைபோட வேண்டிய அவசியமே இல்லையே! பெயரை மாற்றினாலே போதுமே! பெயரும் புகழும் செல்வமும் குவிந்து குபேரனாகி விடுவோமே!
பெயரில் உள்ள எண்கள் வேலை செய்யுமா என்றால் செய்யும்!
அது கடும் மழையில் உடம்பெல்லாம் நனைந்து போனாலும்
நமது தலை நனையாமல் காப்பாற்றுமே நாம் எடுத்து சென்ற
குடை! அதுபோலத்தான் பெயர் மாற்றங்களும்! நாம் சூட்டிக்
கொள்ளும் மகுடத்தில் ஒளி வீசும் நவரத்தின கற்கள்
போலத்தான் நம் பெயர்களும்! ஆனால் நாம் சூட்டிக்கொள்ள மகுடம்
வேண்டுமே…….! அது காலத்தால் மட்டுமே வழங்கப்பட முடியும்!
அதனால்தான் காலத்தை கணிக்கும் நமது ஜோதிடத்தை,
முன்னோர்கள் ‘காலக் கணிதம்’ என்ற சிறப்பு பெயர் சூட்டி அழைத்தனர்.
சரி, ஏழரை கொடிதா? அஷ்டம சனி கொடிதா
என்றால், ஏழரை கொடிதே அல்ல! அது நமக்கு வாழ்வியல்
பாடங்களை போதிக்கும் ஆசான் மாதிரி! ஆனால் அஷ்டம்
அடுக்கடுக்கான துன்பங்களை தரும் அரக்கனைப் போல! ஓரளவு
விஷயம் அறிந்த ஜோதிடர்கள் கூட ஏழரையை ஒத்துக் கொள்வார்கள்.
ஆனால் எட்டாமிட சனியான, அஷ்டமத்து சனியை மட்டும்
ஆதரிக்கவே மாட்டார்கள்! அந்த அளவுக்கு கெடுபலன்கள் தருமோ,
சனி எட்டில் நின்றால்?! அதையும் தான் பார்ப்போம்.
ஆயுள், யுத்தம், நீங்காத விரோதம், பழி பாவம், காரிய தடைகள்,
தீராத வியாகி, மரண பயம், கடன்காரர்கள் தொல்லை, தூக்கு தண்டனை, மாங்கல்யம், ஆயுதங்களால் தாக்கப்படுதல், முற்பிறப்பு தீவினைகள் என்று நீண்டு கொண்டே போகிறது எட்டாமிட சனியின் பலன்கள்!
ஆனால் மேலே சொல்லப்பட்டதில் நீங்கள் கவனிக்க வேண்டிய
ஒற்றை வார்த்தை இது மட்டும்தான். முற்பிறப்பு தீவினைகள்!
முற்பிறப்புகளில் நாம் செய்த நன்மை – தீமைகளின் தொகுப்பே, நமக்குள்ள இப்பிறப்பு என்று ஜோதிடம் இயம்புகிறது! ஆனால் அஷ்டம சனிக்காலம் நம்முடைய முற்பிறப்புகளில் உள்ள தீயதை மட்டுமே எடுத்து தரக் கூடியதாய் இருக்கிறது! அதனால்தான் அஷ்டம சனியை அரக்கன் என்றேன். அதுவும் இரக்கமற்ற அரக்கன்…..எப்படி?
- நீங்கள் சாலையோரம் நடந்து சென்றுக் கொண்டிருக்கீர்கள்!…
அப்போது தாறுமாறான வேகத்தில் வந்த ஒரு வண்டி, உங்கள்
மீது மோதி விட்டது! - நீங்கள் புத்தகப் புழு! ஆனாலும் இந்த ஆண்டு அரசு பொது தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. காரணம் உங்களுக்கு வந்த விஷக் காய்ச்சலை விரலைகூட அசைக்க முடியாமல்
படுத்த படுக்கையாய் கிடந்தீர்கள்! - தெரியாமல் எறும்பை மிதித்து விடுவதைக் கூட விரும்பாதவர்
நீங்கள்…ஆனால் எவரோ செய்த கொலை பழி உங்கள் மீது
விழுந்து அரசாங்கத்தால் தண்டிக்கப்படுகிறீர்கள்! - திருமண மகிழ்ச்சியை நீக்கமற அனுபவித்து, அதனால் வயிற்றிலுதித்த சின்ன சிறிய சிசுவுக்கு பெயர் வைத்து கொஞ்சி, கர்ப்ப காலம்வரை பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த உங்களுக்கு ‘உடல் ஊனமுற்ற குழந்தை’ பிறக்கிறது!
இப்படி நாம் கனவிலும் நினைக்காத கொடூரங்கள் நிகழ்ந்தால், அதற்கு பெயரே அஷ்டமச்சனி! இப்படியான எட்டாமிட சனியை எதிர்கொள்வது சாத்தியமா என்றால் சாத்தியமே!
அது எப்படி என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.
கருத்து தெரிவிக்க