உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

2000 ஏக்கர் மட்டக்களப்பு காணிகள் வர்த்தமானி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது

மட்டக்களப்பு- மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 2000 ஏக்கர் காணிகள் யாருக்கும் தெரியாத வகையில் வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சினால் வர்த்தமானி விளம்பரம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மண்முனை மேற்கு பிரதேசத்தில் மேய்ச்சல் தரைக்காகவும், விவசாய மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற 2000 ஏக்கர் காணிகள், வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளருக்கும் தெரியாத வகையில் அப்போதைய வலுமீள் புதுப்பித்தல் அமைச்சராகவிருந்த ரஞ்சித் சியாம்பலாப்பிட்டியவின் காலத்தில், 2017ஆண்டு யூன் மாதம் 05 ஆம் திகதி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.

ஆயிலையடிச்சேனையில் 507.25ஏக்கரும், கண்டியநாற்றில் 726ஏக்கரும், பன்சேனையில் 548.5ஏக்கர் காணியும் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.

இக்காணிகளில் பன்சேனை பகுதியில் 50ஏக்கரில் சோளார் மின் உற்பத்திக்காக சகோதர இனத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதனால் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலையேற்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி உடனடியாக வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க