அகதிகளை வலுக்காட்டாயமாக நாட்டில் இருந்து வெளியேற்றி சொந்த நாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை பாரதூரமான மனித உரிமை மீறல் செயல் என அந்த அமைப்பு வெளியிட்டள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானிய சிறுபான்மை ஷியா மற்றும் கிறிஸ்தவ மக்கள் சிலர் கடந்த சில வருடங்களாக இலங்கையில் தஞ்சமடைந்துள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்கள் ஆயுதக் குழுக்களின் வன்முறை மற்றும் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் மரண தண்டனையை கூட எதிர்நோக்கலாம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
சொந்த நாடுகளில் அடக்குமுறைகளுக்குள் சிக்கிய மக்களை வரவேற்கும் இலங்கை, அந்த சாதகமான விடயத்தை தொடர்ந்தும் கட்டியெழுப்ப வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயம் நியாயமான முறையில் அணுகப்பட வேண்டும் எனவும் பாரிய மனித உரிமை மீறல் வன்முறைகளுக்குள் சிக்கும் வகையில் எவரையும் இலங்கை நாடு கடத்தக் கூடாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க