உள்நாட்டு செய்திகள்

நாட்டிற்கு தற்போது தேர்தலே அவசியம்- முன்னாள் முதலமைச்சர்

நாட்டில் தற்போது நீடித்து வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை நீக்க உடனே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமகால அரசியல் தளம்பல் நிலை தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகளை சீர் செய்ய பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

அது சாத்தியமாகாவிட்டால் விகிதசாரத் தேர்தல் முறைமையின்படி மாகாண சபைத் தேர்தலையாவது நடத்தி மக்களின் நிர்வாகத்தை நடாத்த வழிவகை செய்ய வேண்டும்.

இப்பொழுது நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஜனநாயக முறைமையிலான மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு தேர்தல்கள் காலதாமதப்படுத்தப்படுவதாகும்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பங்குச் சந்தை பாரிய பின்னடைவைக் கண்டு வருகின்றது. இந்தநிலை தொடருமானால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இந்தநிலையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

இனி தேர்தலை நோக்கி நகர்வதைத் தவிர அரசியல் தலைமைகளுக்கு வேறு தெரிவு இல்லை.

அது மாகாண சபைத் தேர்தலாகவோ, பொதுத் தேர்தலாகவோ, ஜனாதிபதித் தேர்தலாகவோ இருக்கலாம்.

தேர்தலை நடத்தாவிட்டால், இந்த நாட்டில் இனங்கள் பிரிந்து இருப்பதோடு சமூகப் பாதுகாப்பு, அரசியல் உத்தரவாதம், உரிமைகள், இருப்பு என்பனவற்றை இழக்க வேண்டியேற்படும்.” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க