உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

காணாமல்போனோர் தொடர்பான பிராந்திய அலுவலகங்கள் – ஜுலை முதல் வடக்கில் அமைக்கப்படும்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையாளும் பணியகத்தின் வடமாகாணத்துக்கான பிராந்திய அலுவலகங்களை அமைக்கும் பணிகள் ஜுலை மாத இறுதியில் ஆரம்பமாகும் என்று
பணியகத்தின் தலைவரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான சாலிய பீரிஸ் ‘ஊடகனி’டம் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் ஜுலை மாத இறுதியிலும் அதன் பின்னர் கிழக்கு மாகாணத்திலும் அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கு , தெற்கு உட்பட நாட்டில் 12 பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்கு காணாமல்போனோர் பணியகம் திட்டமிட்டிருந்தது. இவற்றில் எட்டு அலுவலகங்கள் வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே திறக்கப்படவுள்ளன.
முதலாவது அலுவலகம் அண்மையில் மாத்தறை மாவட்டத்தில் திறக்கப்பட்டது. இந்நிலையில் பணியகத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் வினவியபோதே சாலிய பீரிஸ் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“அலுவலகங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகின்றது. இப்பணி முடிவடைந்த பின்னர் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.’’ என்றும் அவர் கூறினார்.
கடந்த காலத்தில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விவரங்களை அறிந்துகொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே இக்குழுவின் நோக்கமாகும்.
காணாமற் போனவர்கள் சம்பந்தமாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமற்போனோர் மற்றும் அவர்களது உறவினர்களின் உரிமைகள் மற்றும் பற்றுதல்களை பாதுகாத்துக்கொள்ளல்,
அறிவுறுத்தல், அரச நிறுவனங்கள் மற்றும் வேறு நிறுவனங்கள் மூலம் கண்டு பிடிப்பதற்கு முடியாமற்போன நபர்களின் விபரங்கள் அடங்கிய தரவுகளை திரட்டி மத்திய தரவு வலையமைப்பொன்றை ஏற்படுத்தி கோவைப்படுத்தல் போன்ற பணிகளை இக்குழு முன்னெடுக்கவுள்ளது.

கருத்து தெரிவிக்க