உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

உயிர் இருக்கும் வரை இலங்கையை இஸ்லாமிய தேசமாக மாற்ற இடமளிக்க மாட்டேன் – ரத்தன தேரர்

தனது உயிர் இருக்கும்வரை இலங்கையை இஸ்லாமிய தேசமாக மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு அரேபிய தனியார் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த ரத்தன தேரர் இந்தப் பல்கலைக்கழகத்திற்காக செலவிடப்பட்ட பணம் உட்பட இதுகுறித்த முழுமையான விசாரணை அவசியம் என்பதையும் மீண்டும் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு அரேபியப் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ரத்தன தேரரின் குழுவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே சற்று முருகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய அரேபியப் பல்கலைக்கழகத்தினைப் பார்வையிடுவதற்காக அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்த சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தன தேரர் நேற்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ரத்தன தேரரின் இந்த விஜயத்தில் பிக்குமார்கள் சிலரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் பிரியந்த பத்திரண என்பவரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் பல்கலைக்கழக வளாகத்திலும் நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஆயுதம் தரித்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தப் பல்கலைக்கழகத்திற்குள் செல்வதற்காக ரத்தன தேரர் உள்ளிட்ட குழுவினர் முன்வைத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா இராணுவத்தின் உயரதிகாரிகள் நிராகரித்தனர்.
இந்த அறிவிப்பை மீறி கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் பிரியந்த பத்திரண நுழைய முயற்சித்தபோது அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
இறுதியில் ரத்தன தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு குறித்த தனியார் பல்கலைக்கழகத்திற்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஊடகங்களுக்கு உட்செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
பல்கலைக்கழகத்திற்குள் சென்று பார்வையிட்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அத்துரலியே ரத்தன தேரர், தனது உயிர் இருக்கும்வரை இலங்கையை இஸ்லாமிய தேசமாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்று கூறினார்.

கருத்து தெரிவிக்க