கட்டுரைகள்புதியவை

பேரூந்துப் பயணங்களில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள்

இலங்கையின் பல மாவட்டங்களிலும் மக்கள் தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள மற்றும் வேலைகளை தொடர ஏதோவொரு வாகனத்தில் பிரயாணம் செய்கின்றனர்.அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் என்ன தான் மோட்டார் வாகனங்களை சொந்தமாக பலர் வைத்திருந்தாலும் அனைவரும் விரும்பும் போக்குவரத்து நெரிசலற்ற மற்றும் விபத்துச் சிக்கலற்ற பேரூந்துப் பயணங்கள் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளன.ஆனால் இன்றளவில் இப் பேரூந்துப் பயணங்கள் அனைத்தும் பெண்களிற்குப் பாதுகாப்பானதாகவோ சௌகரியமான நினைவுகளை ஏற்படுத்துவதாகவோ அமைவதில்லை என்பது முற்றிலும் நிதர்சனமான உண்மை.

அன்றாடப் பேரூந்துப்பயணங்களாயினும் நீண்ட தூரப்பயணங்களாயினும் கசப்பான நினைவுகளைத்தான் பெண்கள் மனதில் ஏற்படுத்துகின்றன.இதன் பிற்பாடு ரசனை மிகுந்ததாகவோ விருப்புடனானதாகவோ பயணங்களை மேற்கொள்ளமுடிவதில்லை. இந்தப் பேரூந்தில் தான் நாம் பயணம் செய்யவேண்டி இருக்கிறதே என்று முகம்சுழிக்குமளவு பல ஆண்கள், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களை மேற்கொள்கின்றனர்.

பெண்களிற்கான பாதுகாப்பு என்பது பல சந்தர்ப்பங்களில் நிர்க்கதியான நிலையாகிவிடுகின்றது. யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேரூந்துகளிலும் யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்திற்கு வரும் பேரூந்துகளிலும் தினமும் பயணம் செய்யும் பெண்கள் சீண்டல்களையும் துஷ்பிரயோகங்களையும் கண்டுதான் பயணங்களைத் தொடர்கின்றனர்.

இத் துஷ்பிரயோகங்களுக்கு மத்தியில் நடத்துனர்கள் பேரூந்துகளில் மூச்சு முட்டுமளவிற்கு பயணிகளை ஏற்றுகின்றனர்.இதனை சாதகமாக்கி பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் மென்மேலும் நிகழ்ந்தேறுகின்றன. இத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண்கள் அவற்றை வெளிப்படுத்த முன்வராமையினால் தமக்கான பேச்சுச் சுதந்திரத்தை இழந்து இன்னலிற்கு உட்படுகின்றனர்.

துஷ்பிரயோகங்கள் இன்றிய சூழலில் பெண்கள் வாழ்வதற்கு ஆரம்பகட்டமாக இப் பேரூந்துள் நடைபெறும் துஷ்பிரயோகங்களிற்கு எதிராக குரலெழுப்ப வேண்டும்.பேரூந்துப் பயணங்களைத் தொடரும் போது அங்கே பெண்கள் தமக்கு ஏற்படும் இன்னல்களை முன்வந்து கூறுவதன் மூலமாகவும் பேரூந்து நடத்துனர்கள் பெண்களின் பாதுகாப்பினைக் கண்காணிப்பதன் மூலமாகவும் நிம்மதியான பயணங்களைப் பல பெண்கள் தொடர்வார்கள்.பெண்களிற்கான பாதுகாப்புத் தேவையை நாம் ஒவ்வொரு உணர்ந்து செயற்பட வேண்டும்.

கருத்து தெரிவிக்க