“ மலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கல்வி விழிப்புணர்ச்சியே சிறந்த வழியாகும்.’’ – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், காணிவுரிமை என்ற கனவை நனவாக்குவதற்காகவும் நேசக்கரம் நீட்டுவதற்கு மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்கள் தயாராகவே இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
‘ஊடகன்’ வாரஇதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த கருத்துக்களை குறிப்பிட்டார்.
“ மலையக மக்களின் வாழ்வியலையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் அன்று முதல் இன்றுவரை ஒரு வரையறைக்குள் மட்டுப்படுத்தியே வைத்துள்ளனர்.
தேயிலை பயிர்செய்கையும், அது சார்ந்த உப தொழில்களையும் நம்பியே அவர்களின் வாழ்க்கை சுழன்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலைமை மாறவேண்டும்.
அவர்களின் வாழ்க்கைப் பாணியில் மாற்றம் வரவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் பரந்துப்பட்ட நிலங்கள் இருக்கின்றன.
1977, 1983 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களையடுத்து மலையக மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து கிழக்கில் குடியேறினர்.
குறிப்பாக மட்டக்களப்பில் புல்லுமலை முதல் கரடியனாறு வரையான பகுதியில் மலையக தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.
எனவே, தற்போது மலையகத்தில் வாழும் மக்களுக்கு அங்கு வீடு இருந்தாலும், மட்டக்களப்பு வந்தும் நிலங்களை வாங்கலாம். பயிர் செய்கைகளில் ஈடுபடலாம்.
தோட்டத்தொழிலாளர்கள் என்ற நிலையிலிருந்து மாறி விவசாயிகளாகவும், தொழில் வழங்குனர்களாகவும் கூட மாறலாம்.
பலர் அவ்வாறு வளர்ச்சி கண்டுள்ளனர். அரச தொழில்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்துகளில் இருக்கின்றனர்.
மலையகத்திலிருந்து ஒட்டுமொத்தமாககூட வரவேண்டியதில்லை.
4 பிள்ளைகள் இருப்பார்களாயின், இருவர் அங்கும், மேலும் இருவர் இங்குமாக இரண்டு பகுதிகளிலும் வாழலாம்.
சொத்துடமையாளர்களாக மாறலாம். மலையகத்தில் காணிகளை பெறுவது கடினமாக இருந்தால்கூட இங்கு அது பெரிய பிரச்சினையாக இருக்காது. மலையக மக்கள் வருவதை அத்துமீறிய குடியேற்றமாகவும் பார்க்கமுடியாது.
மலையகத்தி;ல் 7பேர்ச் காணி வழங்கப்படுகிறது. அது போதுமானதல்ல. அத்துடன் அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. எனவே காலங்காலமாக அவர்கள், காணிகளற்ற பொதுமக்களாகவே வாழப்போகின்றனர்.
இந்தநிலையில் மாறவேண்டும். அவர்களும் சொத்துள்ளவர்களாக மாறவேண்டும்.
நாமும் அவர்களுக்கு பக்கபலமாக இருப்போம். மலையக மக்களின் வருகையால் இங்கு வாழ்பவர்களின் இருப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
கிழக்கிலுள்ள காணிகள் இன்று ஆக்கிரமிக்கப்படுகின்றன.
தமிழர்கள் குறைந்த விலைக்கு தமது காணிகளை விற்கின்றனர்.
வாழ்வதற்கு காணி கொடுப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், பல்வேறு திட்டங்களுக்காக காணிகளை வாங்குகின்றனர்.
இதை ஏற்கமுடியாது. எனவே, மலையக மக்களுக்கு இங்கு காணி வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் வராது.
இன்று வடக்குகிழக்கில் இருந்த 15இலட்சம் பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
அவர்கள் மீண்டும் இங்கு வரப்போவதில்லை. எனவே அந்த இடத்தை மலையக சொந்தங்கள் நிரப்பி வடக்குகிழக்கு காணிகளை பாதுகாக்கமுடியும்.
வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழின மக்கள் குடியியல், வாழ்வியல், கல்வி, தொழில் ரீதியில் இணையவேண்டும்.
அப்போதுதான் தமிழர்களின் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியை காணமுடியும் என்றும் எஸ் சிறிநேசன் குறிப்பிட்டார்.
ReplyForward |
கருத்து தெரிவிக்க