வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளிடம் அறவிடப்படும் அபராதத்தின் தொகையை அதிகரிக்கும் வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்றில் நேற்று 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழக்கப்பட்ட அனுமதியின் படி, குறைந்த தொகை அதிகரிப்பாக அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் விதிமீறல்களுக்காக நான்கு வேக பிரிவுகளின் அடிப்படையில் 3 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதம் அறவிடப்படவுள்ளது.
அத்துடன், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளாவதால் ஏற்படும் உயிரிழப்பிற்காக அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாவிருந்து, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையும், சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கருத்து தெரிவிக்க