உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

‘மஹிந்தவை எதிர்த்ததே அரசியலில் நான் எடுத்த துணிவான முடிவு’

“ மஹிந்த அரசிலிருந்து 2014 ஆம் ஆண்டு வெளியேறியமையே அரசியலில் நான் எடுத்த துணிவான முடிவாகும்.’’ – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்

சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பட்ட அரசியல் விவாத நிகழ்ச்சியில், ‘அரசியலில் நீங்கள் எடுத்த துணிகரமான முடிவாக எதை கருதுவீர்கள்’ என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“  மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறினார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து நானும், எம்.கே.டி.எஸ். குணவர்தனவும் மாத்திரமே சுதந்திரக்கட்சியின் சார்பில் வெளியேறினோம். தற்போது எம்.கே.டி. எஸ். உயிருடன் இல்லை.

மஹிந்தவை எதிர்த்து வெளியேறியமையானது தனது தலையை தானே கருங்கல் பாறையில் முட்டிக்கொண்டதற்கு ஒப்பான செயலாகும் என சிலர் விமர்சித்தனர்.
ஆனால், நாம் சாதித்துகாட்டினோம். மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

வடமத்திய மாகாணத்திலிருந்து அரச தலைவர் ஒருவரை தெரிவுசெய்து வரலாற்று சாதனையை படைத்தோம்.

எதிர்பார்க்கப்பட்ட அனைத்து விடயங்களும் நிறைவேறினவா என்றால் நூறு வீதம் இல்லை என்றே கூறுவேன். இருந்தாலும் அரசியலில் நான் எடுத்த துணிவான முடிவாக இதையே பார்க்கின்றேன்.’’ என்றார்.

கருத்து தெரிவிக்க