கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அமைச்சர் மங்களவின் கருத்துக்கு ஆயர் இல்லம் கடும் கண்டனம்.

தாம் இனவாதத்தை தூண்டுவதாக அமைச்சர் மங்கள சமரவீர, கர்தினால் மல்கம் ரஞ்சித் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆயர் இல்லம் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், கிழக்கு மற்றும் மேல்மாகாண முன்னாள் ஆளுநர்களை பதவி விலக்குமாறு கோரி, அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்டு வந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கர்தினால் கண்டிக்கு சென்றிருந்தார்.

இந்த நடவடிக்கை அவர் இனவாதத்தை தூண்டும் செயலாகவே பார்க்கப்படவேண்டும் என்று அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பில் வத்திக்கான் நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அமைச்சர் கோரியிருந்தார்.

இந்தநிலையில் அமைச்சரின் கருத்துக்கு இன்று மாலை கொழும்பு ஆயர் இல்லம் பதில் வழங்கியுள்ளது.

அதில் மங்கள சமரவீரவின் கருத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துரலியே ரத்தன தேரர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் சார்பிலேயே உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்.

அத்துடன் அந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், அமைச்சர் ஒருவரையும் ஆளுநர்கள் இருவரையும் பதவிவிலக்குமாறு அவர் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில் சமாதானத்தை விரும்பும் கத்தோலிக்கர்கள் என்ற வகையில் மதங்களுக்கு இடையிலான உறவை மதிப்பதாக ஆயர் இல்லம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கர்தினாலின் சமாதான முனைப்புக்களை மதிப்பதாகவும் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கர்தினாலின் இந்த நடவடிக்கை, முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானது அல்ல என்றும் ஆயர் இல்லம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க