விளையாட்டு செய்திகள்

இலங்கை அணிக்கு ஒரே ஒரு வெற்றி-எதிர்வுக்கூரல்

12  வது உலக கிண்ண கிரிக்கட் தொடர் விறுவிறுப்பாக  இடம்பெற்று வரும் நிலையில் போட்டி தொடர்பான எதிர்வுக்கூரலை  வெளியிட்டுள்ளார் நியூசிலாந்து முன்னாள் கிரிக்கட் அணி தலைவர் பிரண்டன் மெக்கல்லம்.

உலகக்கிண்ண தொடரில் எந்தெந்த அணிகள் எத்தனை ஆட்டங்களில் வெற்றி பெறும் என்பதை பிரன்டன் மெக்கல்லம் ஆராய்ந்து ஒரு பட்டியலை தயார் செய்து அதை ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.

இதன்படி ‘முதல்தர  அணிகளில் ஒன்றான இங்கிலாந்து அணி 9 லீக் ஆட்டங்களில் 8–ல் வெற்றி பெறும், ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய அணியும் 8 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறிக்கும், இங்கிலாந்திடம் தோல்வியை தழுவும் என குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு செம்பியனான அவுஸ்திரேலிய அணியை பொறுத்தவரை 6 போட்டியில்  வெற்றியை வசப்படுத்தும்.  மேற்கிந்திய அணி , இந்தியா, பாகிஸ்தான் அணிகளிடம் ‘சரண்’ அடையும் என்று குறிப்பிட்டுள்ள பிரன்டன் மெக்கல்லம், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் சிக்கலின்றி அரை இறுதியை எட்டும் என அவரது கணிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரை இறுதிக்கான மற்றொரு இடத்திற்கு 4 அணிகள் முட்டிமோதும். அதாவது நியூசிலாந்து, மேற்கிந்தியா , தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் தலா 5 வெற்றி, 4 தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் (இலங்கைக்கு எதிராக), இலங்கை (மேற்கு இந்தியாவிற்கு எதிராக) அணிகளுக்கு தலா ஒரு வெற்றி மட்டும் கிடைக்கும், ஆப்கானிஸ்தான் 2 வெற்றி (இலங்கை,பங்களாதேஷ்க்கு   எதிராக) பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க