உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இன்று 31ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் போட்டியில், பந்துவீச்சாளர்களின் மிரட்டல் பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியை மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது.
நொட்டிங்டம் – ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணாயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவு பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பாக பாஹர் ஷமன் மற்றும் பாபர் அஷாம் ஆகியோர் தலா 22 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். ஏனைய வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, ஒஷென் தோமஸ் 4 விக்கெட்டுகளையும் ஜெஸன் கோல்டர் 3 விக்கெட்டுகளையும், அன்ரூ ருஸ்ஸெல் 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஹொட்ரெல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு 106 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 13.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, அதிரடியாக ஆடிய கிரிஸ் கெயில் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு நிக்கோலஸ் பூரன் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒஷென் தோமஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ணத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
கருத்து தெரிவிக்க