வெளிநாட்டு செய்திகள்

விழிநீர் பெருக்கெடுக்க விடைபெறும் நாளை அறிவித்தார் தெரேசா

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தனது பதவியை எதிர்வரும் 7 ஆம் திகதி இராஜிநாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.

ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து இவ்வருடம் மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது.

எனினும், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பியக் கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மூன்று தடவைகள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆளும் பழமைவாத கட்சி உறுப்பினர்களே தெரேசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜிநாமா செய்தனர்.

இதனால் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள தெரேசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3ஆம் திகதி நான்காவது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்த வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்குப் பிரிட்டன் தள்ளப்படும்.

இந்தநிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பான தெரேசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த பெண் அமைச்சர் ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை சமீபத்தில் இராஜிநாமா செய்தார். பிரதமர் பதவி மற்றும் ஆளும் கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரேசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் தற்போது அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், பழமைவாத (கனசர்வேட்டிவ்) கட்சித் தலைவர் பதவியை ஜூன் மாதம் 7ஆம் திகதி இராஜிநாமா செய்வதாக தெரசா மே அறிவித்துள்ளார்.

இலண்டன் நகரில் டவுனிங் வீதியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு இன்று செவ்வி வழங்கிய அவர், “பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருமுறை பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை எனது வாழ்நாளின் கெளரவமாகக் கருதுகின்றேன். எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகின்றேன்” என்று கண்ணீர்மல்கக் குறிப்பிட்டார்.

கட்சிக்குப் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க