உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

27ஆம் திகதி முதல் வகுப்புக்களுக்கு திரும்ப யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் இணக்கம்

பகிஷ்கரிப்பினை தற்காலிகமாக இடைநிறுத்தல் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

——————————————————————————
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது நீதியற்ற முறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஊழியர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்

எனினும்; அவர்களின் முழுமையான விடுதலையை வலியுறுத்தி மாணவர்களாகிய நாம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்திருந்தோம்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் முடிவில் தகுதிவாய்ந்த அதிகாரி பல்கலைக்கழக வளாகத்தில் இக் கைதுகள் இடம்பெற்றமையால் தனக்கும் கூட்டுப்பொறுப்பு உண்டு.

எனவே மாணவர்களின் விடுதலை தொடர்பில் தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் அவர்களின் கல்விக் காலம் முடிவதற்கு முன்னரே அவர்களை முழுமையாக விடுதலை செய்விக்க மாணவர்களோடு பக்கபலமாக நிற்பதாகவும் அது தொடர்பாக ஐனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொள்வதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற காலம் சில பீடங்களிற்கு பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த காலமாகையால் மாணவர்களின் பரீட்சைசார் உளவியல் தாக்கங்களை கருத்திற் கொண்டும் ஏனைய பீட மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை கருத்திற் கொண்டும் தகுதிவாய்ந்த அதிகாரியின் வாக்குறுதியினை ஏற்றும் தற்காலிகமாக எமது கல்விக் புறக்கணிப்பினை நிறுத்திக் கொள்கின்றோம்.

அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் 27.05.2019 (திங்கட்கிழமை) முதல் வழமை போல் இடம்பெறும் மாணவர்களாகிய நாம் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டு மாணவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை ஒன்றினைந்து மேற்கொள்வோம் என்பதுடன் எமது சக மாணவர்களின் பூரண விடுதலை சாத்தியமாகாத பட்சத்தில் இக் கல்வி புறக்கணிப்பினை தொடர்ந்து பல ஐனநாயகப் போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்பதனையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்து தெரிவிக்க