” எனக்கும், பஸில் ராஜபக்சவுக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசுங்கள். உள்வீட்டு விவகாரங்களை சந்திக்கு கொண்டு செல்லவேண்டாம்.” என்று சீறிப்பாய்ந்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.
கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம், மஹிந்த ராஜபக்ச தலைமையில் விஜேராம மாவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
” நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இழுத்தடிக்கின்றனர்.” என்று மஹிந்தவுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். அத்துடன், குறித்த பிரேரணையை பஸில் ஆதரிக்கவில்லை என வெளியான செய்திகளையும் ஆதாரம்காட்டி சில கருத்துகளை முன்வைத்தார்.
இதனால் சினம்கொண்ட மஹிந்த, ” பஸில் ராஜபக்ச எதிர்ப்பு தெரிவிக்கின்றார் என எமது அணியிலுள்ள எம்.பியொருவர்தான் ஊடகங்களுக்கு தகவல் கசியவிட்டுள்ளார்.
தனிப்பட்ட விடயங்களை பொதுவான விடயங்களில் திணிப்பதற்கு எவரும் முற்படக்கூடாது. எனக்கும், பஸிலுக்குமிடையில் மோதல் என்ற தொனியிலும் கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. இவ்வாறான செயலில் இனி எவரும் ஈடுபடக்கூடாது.
பிரேரணை விடயத்தில் குழப்பம் இருக்கின்றது என தெரிந்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவை எவ்வாறு பெறுவது? சில விடயங்களில் கூட்டாக செயற்படவேண்டும். விட்டுக்கொடுப்புகள் இருக்கவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க