நேர்காணல்கள்மலையகச் செய்திகள்

மலையகக் கல்விக்கான தேசிய மாநாடு அவசியம்

கடந்த 4 தசாப்தங்களில் மலையத்தில் இடைநிலைக்கல்வியில், குறிப்பிடத்தக்க வளாச்சி ஏற்பட்டபோதும், மூன்றாம் நிலைக்கல்வியில், மலையகம், மிகவும் பின்தங்கியுள்ளது.
மலையகத்தில் இருந்து இதுவரை, ஒரு சதவீத்துக்கும் குறைவான மாணவர்களே, அரச பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் சென்றனர்.
எனினும் 2018 ஆம் ஆண்டில் சுமார் 500 பேர் வரை பல்கலைக்கழகம் சென்றனர்.
இது ஒரு வரலாற்று சாதனையாகும்.
உண்மையில் சனத்தொகை அடிப்படையில், சுமார் 1700பேர் வருடாந்தம், அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றால் மாத்திரமே, நாம் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு நிகராக கல்வியில் வளர்ச்சிப்பெற்றுள்ளோம் என்றுக்கூறிக்கொள்ளமுடியும்.
இந்தக்கருத்துக்களை மலையகத்தின் தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தில் பிறந்து பேராசிரியராக உயர்வுப்பெற்ற, பேராசிரியர் டி.தனராஜ், தெரிவித்தார்.
ஊடகனுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது இந்த தகவல்களை அவர் வெளியிட்டார்.
இலங்கையில் 14 அரச பல்கலைக்கழங்கள் உள்ளன.
இதனை தவிர 5 பல்கலைக்கழகங்கள் அமைச்சுக்களின்கீழ்; உள்ளன.
எனினும், இந்த பல்கலைக்கழங்களில், மிகக்குறைந்தளவு மலையக மாணவர்களே, அனுமதி பெறுகின்றனர்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன.
குறிப்பாக, 1948இல், நாம் இழந்த அரசியல் சுதந்திரம், 1977 ஆம் ஆண்டுக்கு பின்னரே, எம்மால் பெற்றுக்கொள்ளமுடிந்தது.
அரசியல் உரிமை இல்லாத காரணத்தினால், சுதந்திர இலங்கையில் இடம்பெற்ற, பாரிய கல்வி வளர்ச்சியில், மலையக மக்கள், பங்காளிகளாக மாறமுடியவில்லை.
1945ஆம் ஆண்டில், இலவசக்கல்வியின்  தந்தை என்றுப்போற்றப்படும் சி.டபிள்யூ.டபிள்;யூ கன்னங்கரவின் தலைமையில் தேசியக் கல்வி முறைமை உருவாக்கப்பட்டபோது,  துரதிஸ்டவசமாக மலையகக் கல்வி, அதில் உள்வாங்கப்படவில்லை.
அன்று மாத்தளை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவிஹாரவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால், இன்று மலையகக் கல்வியானது, தேசியக்கல்விக்கு சமனாக வளர்ச்சிப்பெற்றிருக்கும்
1960களில், பாடசாலைகள், தேசிய மயமாக்கப்பட்டபோதும்கூட, பெருந்தோட்டப் பாடசாலைகள் நிராகரிக்கப்பட்டன.
பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்ற மலையக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த மாணவர்கள் தொடர்ந்தும் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர்கின்றனரா என்பதை கண்டறிய பொறிமுறை ஒன்று இல்லை.
மலையகத்தில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களுக்கு மலையக மாணவர் ஒருவருக்கு
மாதம் ஒன்றுக்கு சுமார் 12000 ரூபா தேவைப்படும்.
மஹாபொல மூலம் 5000 ரூபா மாத்திரமே கிடைக்கும்.
இந்தநிலையில் குறித்த மாணவன் அல்லது மாணவி தொடர்ச்சியாக கல்விகற்க வசதிகள் செய்துக்கொடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.
இதனை செய்யக்கூடிய ஆற்றல், எமது அரசியல்வாதிகளிடமும் சமூகத்தில் உள்ள செல்வந்தவர்களிடம் மாத்திரமே உள்ளது.
எனினும் அவ்வாறான ஒரு செயற்பாடு இல்லையென்றே கூறவேண்டும்.
இன்று மலையகத்தின் கல்வியை பொறுத்தவரையில், பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன.
பாடசாலைகளில் பௌதீக  வசதிகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் விடயத்தில் அளவு ரீதியான பற்றாக்குறை காணப்படுகிறது.
அத்துடன் கல்விசார் ஆளனி தொடர்பான பண்புத்தரம் ரீதியான பிரச்சனைகளும் உள்ளன.
இவ்வாறான பிரச்சனைகள் இருந்தபோதும் கூட பரீட்சைப்பெறுபேறுகளில், ஒப்பீட்டு அளவில், தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்படுகிறது.
எனினும் தேசிய ரீதியி;ல் மலையக சமூகம் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது கல்விநிலையில் பின்தங்கியே உள்ளது.
மத்திய மலைநாட்டில்,சில பாடசாலைகளின் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை  வைத்துக்கொண்டு நாம் ஒட்டுமொத்தமாக கல்வியில் வளர்ச்சிப் பெற்றுவிட்டோம் என்று கூறமுடியாது.
உண்மையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மலையக மாணவர்கள் தொடர்பான முழுமையான விபரங்களை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்குவதில்லை.
இதற்கான காரணம், மலையக சமூகம், ஒரு தேசிய இனமாக இலங்கையின் அரசியல் அமைப்பில் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
இலங்கையில் சுமார் 24 அரச சேவைகள் உள்ளன.
எனினும் இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை அதிபர்கள் சேவை, ஆகிய சேவைகளில் மாத்திரமே, மலையகத்தவர்கள், குறிப்;பிடக்கூடிய எண்ணிக்கையில் உள்ளனர்.
கல்வி நிர்வாக சேவையில் சுமார், 50பேர் மாத்திரமே மலையகத்;தவர்களாக உள்ளனர்.
உண்மையில், மலையக கல்விமுறைமையில் 150க்கும் மேற்பட்ட கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கான தேவை உள்ளது.
போதிய கல்வி நிர்வாகிகள் இல்லையென்றால், சிறந்த சேவையை வழங்கமுடியாது.
கண்டி நுவரெலியா முதலிய மாவட்டங்களில் மாத்திரமே ஓரளவு மலையக கல்வி நிர்வாகச் சேவை அதிகாரிகள் உள்ளனர்.
எனினும் ஊவா மற்றும் சப்ரகமுவ போன்ற இடங்களில் கல்வி அதிகாரிகள் போதுமான அளவு இல்லை.
இலங்கையின் வெளிநாட்டு சேவையில் 3 மலையகத்தவர் மாத்திரமே உள்ளனர்.
இலங்கை திட்டமிடல் சேவை, நீதி நிர்வாகசேவை, நிர்வாக சேவை, முதலியவற்றில், இரண்டு மூன்று பேர் உள்ளனர்.
ஏனைய சேவைகளில், மலையகத்;தைச் சேர்ந்தவர்கள், எவரையும் காணமுடியவில்லை.
இலங்கையில் இன்று அரச பல்கலைக்கழகங்களில்; சுமார் 5000 விரிவுரையாளர்கள் உள்ளனர்.
உண்மையில் மலையக சமூகத்தின் சனத்தொகை அடிப்படையில்
சுமார் 300 பேர் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக இருக்கவேண்டும்
ஆனால்  சுமார் 20 பேர் மாத்திரமே உள்ளனர்.
அரசப் பல்கலைக்கழகங்களில் சுமார் 400 பேர், பேராசிரியர்களாக இருக்கின்றனர்.
ஆனால் இதுவரை மலையகத்தில் இருந்து பேராசிரியர்களாக, பதவியேற்ற பேராசிரியர்களான சின்னத்தம்பி, சந்திரசேகரம், மூக்கையா, சிவகணேசன். தனராஜ், ஆகியோர் இன்று ஓய்வுப்பெற்றுள்ளனர்;.
மிக அண்மையில், மலையகத்தை சேர்ந்த விஜயசந்திரன் பேராசிரியராக பேராதெனிய பல்;கலைக்கழகத்தில் நியமனம் பெற்றார்.
இது மலையகத்தி;ல் உயர்க் கல்வி நிலையின் வறுமையை சுட்டிக்காட்டக்கூடிய சிறந்த உதாரணமாகும்.
உண்மையில், மலையகத்தைச் சேர்ந்தவர்கள், குறைந்தது. 25 பேரேனும் பல்கலைக்கழக பேராசிரியர்களாக பதவிப்பெறும்போதே நாம் மலையகத்தின் கல்விக்குறித்து நியாயமான பெருமையை அடையமுடியும்.
இந்தநிலையில் முதலில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டவேண்டும்
அத்துடன் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பெற்று செல்கின்ற மாணவர்கள், தொடர்ந்து, கற்று சிறந்தமுறையில், சித்தி பெறுவதற்கான வசதிகள் செய்யப்படல்வேண்டும்.
ஒவ்வொரு நகரங்களிலும் திருவிழா போன்றவற்றுக்கு செலவிடப்படும், கோடிக்கணக்கான பணத்தில் ஒரு சிறுப்பகுதியை, மலையக மாணவர்களின் உயர் கல்விக்காக வழங்கமுடியும்.
அத்துடன் மலையகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், இருந்து பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள தோட்டத்தொழிலாளர்களும் ஏனையோரும் உதவவேண்டும்.
அத்துடன், மலையகத்துக்கு ஒரு பல்கலைக்கழகம், தேவை என்று கருத்தியல், பல ஆண்டுகளாக கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
எனினும் மலையத்தின் அரசியல்வாதிகள் இதற்கான உரிய முன்னெடுப்பை தொடர்ச்சியாக வழங்கவில்லை.
இந்த விடயத்தில், மலையக அரசியல்வாதிகள்  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கிய, எம்எச்எம் அஸ்ரப்பின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் முயற்சியையும் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும்.
எனினும் மலையகத்தின் சில கல்வியாளர்கள், பேராசிரியர் சந்திரசேகரம் தலைமையில், மலையக பல்கலைக்கழகம் தொடர்பாக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றனர் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
எனினும், அவர்களது கனவு இன்னும் நனவாகவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
மலையகத்தி;ல் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு, போதுமான மாணவர்கள் இல்லையென்பதை, ஏற்றுக்கொள்ளமுடியாத வாதமாகும்.
எந்தவொரு நாட்டிலும், சகல பீடங்களையும் கொண்ட ஒரு பல்கலைக்கழகம், ஒரே நாளில் உருவாக்கப்படவில்லை.
இந்தநிலையில், மலையகத்தில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின்கீழ் வரக்கூடியதாக ஒரு வளாகத்தை முதலில் ஆரம்பிக்கமுடியும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் ஒரு வளாகமாக பரமேஸ்வரா கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று யாழ்ப்பாண சமூகத்தின் மிக முக்கிய அங்கமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் விளங்குகிறது.
அதேபோல கிழக்கு பல்கலைக்கழகமும் வந்தாறுமூலை மகாவித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று, அது, பாரிய பல்கலைக்கழகமாக வளர்ச்சிப்பெற்றுள்ளது.
எனவே மலையத்தின் அனைத்துக்கட்சி அரசியல்வாதிகளும் இணைந்து 15வது அரச பல்கலைக்கழகத்தை ஹட்டன் பிரதேசத்தில் அமைக்குமாறு கோரினால், அந்தக்கோரிக்கை நிச்சயம் வெற்றி பெறும்.
அத்துடன் இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் சகோதர சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர், உயர்கல்வி அமைச்சராக இருக்கின்ற சந்தர்ப்பத்தில், மலையக பிரதேசத்தில், ஒரு பல்கலைக்கழகத்தை அமைக்கக்கூடிய வாய்ப்பு, மிகவும் பிரகாசமாகவே உள்ளது.
இந்தக்கோரிக்கைக்காக மலையக மலையகத்தின் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும்.
திலான் பெரேரா, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்த குறுகிய காலத்தி;ல் மலையக பல்கலைக்கழகத்துக்கான அடையாள நிதியை வரவுசெலவுத்திட்டத்தில் தமது அமைச்சு சார்பாக ஒதுக்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மலையக கல்வி மேம்பாட்டுக்கான இன்னொரு விடயம், மலையகக் கல்விக்கான தேசிய மாநாடு ஒன்றை நடத்துவதாகும்.
மலையகக்கல்வியின் இன்றைய நிலைமையை ஆராய்ந்து எதிர்கால இலக்குகளையும் அந்த இலக்குகளை அடையக்கூடிய வழிமுறைகளையும் பற்றி, இந்தகைய கல்வி மாநாட்டில் நாம் ஆராயமுடியும்.
முதலாவது மலையக கல்வி மாநாடு, 1994 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை, தேசியக் கல்வி ஆணைக்குழுவின் அப்போதைய தலைவராக இருந்த பேராசிரியர் லக்ஸ்மன் ஜயதிலக்க ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தநிலையில் மலையக கல்வி மாநாடு, நிச்சயமாக மீண்டும் கூட்டப்படவேண்டும்.
இந்த மாநாட்டின் ஊடாக மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கமுடியும்.
இந்த மாநாட்டை கூட்டுவதற்கான ஆயத்தங்களை செய்வதற்கு தாமும் ஏனைய கல்வியாளர்களும்; தயாராகவே இருப்பதாக ஓய்வுநிலைப் பேராசிரியர் டி.தனராஜ் ஊடகன் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
ஊடகனின் கருத்து
0000000000000000
பேராசிரியர் டி தனராஜின் கருத்துக்கள் நிச்சயமாக மலையக கல்வி வளர்ச்சிக்கு அவசியமானவை என்று ஊடகன் கருதுகிறது.
எனவே இது தொடர்பில் மேலும் கருத்தாடல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துச்செல்ல ஊடகன் எதிர்ப்பார்க்கிறது.
000000000000000000000000000

கருத்து தெரிவிக்க