கட்டுரைகள்மலையகச் செய்திகள்

கல்வி ஒன்றை மலையகத்தை மீட்கும் ஆயுதம்

எங்கு திரும்பினும் வனாந்தரம்,இருள்மண்டிய காட்டின் நடுவே கொட்டிவிட்ட குப்பையாய்  நமது முன்னோர்கள் இங்கே கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளனர்.
அட்டையின் உறிஞ்சல்களும்,அரைவயிற்றுக்கஞ்சியும்,கொட்டும் மழையும்,கொடுங்குளிரும் இம்மக்களின் உடல்களை இம்மண்ணிலேயே மக்கிபோகச்செய்திருக்கிறது.
மீதியிருந்தோரின் மீது அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
அவர்கள் சக்கையாய் பிழியப்பட்டனர்
அவர்தம் உடைமைகள்மீதும் உடல்கள் மீது ஏகாத்தியபத்திவாதிகளும் அவர்தம் கைகூலிகளும் ஆட்சி புரிந்தனர்.
காலங்கடந்தது கதிரவன் புகமுடியாத காட்டுப்பகுதி மௌ;ள மௌ;ள வெள்ளைக்காரனின் வற்புறுத்தலில் நமது மக்களின் உழைப்பில் பெருவெளியானது.
பச்சைபசேல் என்ற தேயிலைவந்தது,
பாதைகள் வந்தன,பட்டினங்கள் வந்தன பாலங்கள் வந்தன இருப்பு பாதைகள் வந்தன.ஆனாலும் நம் இருப்பு இன்னமும் கேள்விகுறிதானே….?
மலையக மக்கள் வளர்ந்துவிட்டால் தமது ஆதிக்கத்துக்கும் அடக்குமுறைக்கும் வழி இல்லாமல் போய்விடும் என சிங்களம் நினைத்ததோ இல்லையோ ,ஆனால் பேரினவாதத்தோடு கூட்டமைத்திருந்த,குறுநில மன்னர்கள் என தம்மை நினைத்துக்கொண்ட சில தமிழ் அரசியல் கூட்டம் நினைத்தது
அதனால் நமது பிரஜாஉரிமை பறிக்கப்படக்காரணமாய் இருந்தது.
1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டமூலத்துக்கு சிங்களத் தேசிய வாதிகளும் தமிழ் தேசியவாதிகளும்  கைகோர்த்த ஆதரவளித்தனர்.
இதன்கீழ் இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் அவர்கள் வெற்றிபெற்றார்கள்.
அதுவரை அந்நியர்களின் ஆட்சிபிடியில் அடிமைப்பட்டிருந்த நம்மக்கள் தேசிய அரசியல் வாதிகளின் ஆட்சியில் அடிமைப்பட தொடங்கினர்.
காணியில்லை,சொந்தவீடில்லை,அரசகல்வி ஒழுங்காக இல்லை,அடிப்படை வசதியில்லை  அதேநேரம் கல்விவாய்ப்பும் கதவை திறந்து வைதுக்கொண்டு காத்திருக்கவில்லை.
வசதியுடையோருக்கு மட்டுமே கல்வி கிட்டியது, இரத்தத்தை செந்நீராய் இம்பூமிக்கு ஊற்றி தம்முடலையே உரமாக்கி பயிர்வளர்த்தவனின் குடும்பம் இன்னமும் கைநாட்டுதான்.
சிங்களகிராமங்களுக்கும் போதிய அளவு கல்வி கிட்டாதப்போதும் ஊறுநு கன்னங்கரவின் பெரு முயற்சியால் 1945.ஒக்டோபர் 15ல் இலவசக்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தினால் பெருந்தோட்டப்பாடசாலைகளைத்தவிர ஏனைய பிரதேசங்களில் கல்வி வளர்ச்சியடையத்தொடங்கியது.
ஆனால் பெருந்தோட்ட கல்வி பின் தங்கியேகாணப்பட்டது.ஏனெனில் மலையக கல்வி கூடங்கள் கல்வியை போதிப்பதற்காய் அமைக்கப்பட்ட ஒன்றல்ல.
கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள் தேயிலைக்கன்றுகளை நாசப்படுத்தி விடாமல் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட பிள்ளை மடுவங்கள் தான் அவை.
படிப்படியாக அவைகள் பள்ளிக்கூடங்களாக பெயெரெடுத்தன,
அவற்றில் ஆயம்மாக்கள் என்பவர்கள ஆரம்பத்தில் பராமரித்திருக்கிறார்கள்,
பின்னர் பகுதி நேரத்துக்கு வாத்தியாராகவும் பகுதி நேரத்துக்கு தோட்டலிகிதராகவும் சிலர் வேலை செய்திருக்கின்றார்கள்.
இப்படியாக 1976 ஆம் ஆண்டளவில் பெருந்தோட்ட பாடசாலைகள் அரசு பொறுப்பேற்கும்வரை ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே இயங்கி வந்திருக்கின்றது.
அரசபாடசாலைகளாக பெயரளவுக்கும் ஆக்கபட்டதே தவிர தேவையான அடிப்படை வசதிகள் ஏதேனும் செய்துத்தரப்படவில்லை.
அந்நிலையில் வடகிழக்கைச்சேர்ந்த ஆசிரியர்களின் பங்களிப்பை மறந்துவிடலாகாது
கல்விகற்ககூடிய பிள்ளைகளை தமது வீட்டுவேலைகளுக்காக ஏமாற்றி அழைத்துச்சென்ற ஆசிரியர்களுக்கு மத்தியில் உண்மையான அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஆசிரியர்களை நாம் மறந்துவிடலாகாது.
எமக்கென்று கற்பிப்பதற்கும் நம்சமூக விழுமியங்களை சரியான முறையில் கடத்துவதற்கும் நேர்பட ஆட்கள் இல்லாதநிலையில் 402 ஆசிரியர்கள் எமது சமூகத்திற்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதமாகும்.
இந்த ஆசிரியர்களே மலையக சமூகத்துக்கென நியமனம்பெற்ற முதலாவது பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி மேலெழுந்த ஆசிரியர்கள்.
மூடிக்கிடந்த பல பள்ளிக்கூடங்கள் என சொல்லப்பட்ட கூடங்களைத்திறந்து பாடசாலைகளாக்கியவர்கள்.
மாட்டுகொட்டகைகளாக காணப்பட்ட பள்ளிகூடங்கள் இன்று மகாவித்தியாலங்களாக பரிணமித்திருக்கின்றன.
அதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்கள் பலரும் இன்று ஓய்வுநிலையில் இருக்கின்றார்கள்.
அதற்கடுத்ததாக பலகட்டங்களில் மலையக பெருந்தோட்டப்பாடசாலைக்கென ஆசிரியர் நியமனங்கள் வழங்க்ப்பட்டுள்ளன.
ஸ்ரீபாத தேசிய கல்வியற்கல்லூரி மலையக தோட்டதொழிலாளர்களின் பிள்ளைகளுக்காகவே அமைக்கப்பட்ட கல்லூரியாகும்.
எனவே பல்தரப்பட்ட ஆசிரியர் நியமனக்களினூடாக மலையகத்தில் இன்று கற்றோரின் எண்ணிக்கை கூடிவருகின்றது.
இருந்தப்போதும் தேசியகல்வி வளர்ச்சியோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது இது மிகச்சொற்பமே.
ஏனெனில் 1945ஆம் ஆண்டு இலவசகல்வி கொள்ளையோடு எம்மால் இணைந்துக்கொள்ள முடியாமல் போனதால் 31 ஆண்டுகள் நாம் பின்னோக்கி இருக்கின்றோம்.
1976 ஆம் ஆண்டு தான் நாம் அரசபாடசாலகள் என்ற ஒரு பதத்துக்குள் உள்வாங்கப்படுகின்றோம்.
அப்போது காலம் வெகு தூரத்துக்கு சென்று விட்டிருக்கின்றது.கையை ஊன்றி கரணம் பாய்ந்து கரையேறியவர்கள் சிலர்.போராட்டத்துக்குள் அடித்து இழுத்து இல்லாமல் போனோர்கள் பலர்.
இன்னமும்,கட்டிடத்துக்காகவும்,மலசலகூடங்களுக்காகவும், ஆய்வுக்கூடங்களுக்காகவும்.பல அடிப்படைவச்திகளுக்காகவும்,பாடசாலை விடுதிகளுக்காகவும் அடிப்பட்டு திரிகின்றோம்.
மலையகத்தில எத்தனை வைத்தியர்கள் உருவாகியிருகின்றார்கள்,
எத்தனை பொறியியலாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.ஏன் இன்னும் பிறதொழில்கள் எவ்வளவோ இருக்கின்றன
அவற்றில் எல்லாம் எத்தனை பேர் நம்மவர்கள் இருக்கிறார்கள்? அவ்வளவு ஏன் மலையகத்தில் பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர் பல கல்வி வலயங்கள் இருக்கின்றன,
எத்தனை வலயங்களில் நம்மவர்கள் கல்வி பணிப்பாளராக இருக்கின்றனர்,எத்தனைப்பேர் பிரதி கல்வி பணிப்பாளர்களாக இருக்கின்றனர்?
கேள்வி கேட்டுக்கொண்டேப்போகலாம் ஆனால் பதில் பெரும்பாலும் மௌனமாகத்தான் இருக்கும்.
ஆசிரியம் இன்று சமூகத்தினை மாற்றுகின்ற ஓர் சக்தியாக காணப்படவில்லை.
ஆசிரியர்களின் வெண்கட்டி இன்று சமூகத்தை செதுக்குகின்ற ஓர் உளியாகப்பாவிக்கப்படவில்லை.
ஓர் சமூகத்தை ஆழ உழுது மாற்றத்தினை விதைக்கின்ற வித்துக்களாக கல்வி பயன்படுத்தப்படவில்லை.
இதையெல்லாம் செய்கின்ற ஆசிரியனை கோமாளிகளாக பார்ப்ப்வர்களும் இல்லாமலில்லை.
ஆசிரியம் என்பது விழுமியமிக்க ஓர் சேவை. ஆனால் அதையும் ஓர் தொழிலாக வருமானத்தை முன்நிறுத்தியதாக சமூக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இன்று சிலர் மாற்றிக்கொண்டு வருகின்றதைக்காணும் போது மலையகமக்கள் தம் தடம் இழந்து சுயமிழந்து மக்கி மறைந்துப்போக நேரிடுமோ எனும் ஆதங்கம் எழுகின்றது.
ஆசிரியம் என்பது வெறுமனே இட்டுநிரப்பும் பாடவிதானங்களை மட்டும் கொண்டு சுழலமுற்பபடுமாயின்,நம் சமூகத்தின் வரலாற்றுச்சக்கரம் அச்சாணி கழன்றதாய் ஆகிவிடும்.
நமது பெருமதிமிக்க ஆசிரியர்களுக்குத்தான் வரலாற்றை மீட்டெடுக்கவும்,காவியம்படைக்கவும் சாதனையாளர்களை உருவாக்கவும் முடியும்.
அதற்குத்தேவை கொஞ்சம் அர்ப்பணிப்பு.ஆசிரிய பயிற்சி பாடவிதானங்களுக்குள் சமூக உணர்வைப்பற்றி,நமது வரலாற்றின் இருப்பைப்பற்றி,எமது சமூக இலக்கைப்பற்றி சொல்லவில்லை தான்.
சிலவேளை நாம் நேரடியாக அனுபவித்திருக்காவிட்டாலும் கூட நம் முன்னார்கள் நம்சமூகத்தின் வலியை சொல்லியிருப்பார்கள்,
அடக்குமுறையின் தழும்புகளைக்காட்டியிருப்பார்கள்,
எமது எதிர்கால தேவைகளை உணர்த்தியிருப்பார்கள்.நம் எனவே எமது சமூகம் மாற்றம் பெற புரட்சி வேண்டும் அந்தப்;புரட்சிக்கு கத்தி தேவையில்லை,துப்பாக்கிகள் தேவையில்லை
கல்வி ஒன்றே நம் சமூகத்தை மீட்கும் ஆயுதம்.
(ரவி போதீஸ்)

கருத்து தெரிவிக்க