சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

மாலிங்கவை நாயகனாக்கிய இறுதி அஸ்திரம்

பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும்  பஞ்சமில்லாத வகையில் நடைபெற்ற ஐ.பி.எஸ். இறுதியாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, வெற்றிக்கனியை ருசித்தது. இதன்மூலம் ஐ.பி.எல். தொடர்களில்  4 தடவைகள் முதலிடத்தை பிடித்த அணி என்ற பெருமையையும் தனதாக்கிகொண்டது.

ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி தலைவர் ரோஹித் சர்மா, முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தார். இதன்படி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் 150 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலடிகொடுக்க களமிறங்கிய சென்னை அணி, இலகுவில் இலக்கை தொட்டுவிடும் என்றே பலரும் எதிர்வுகூறினர். இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் ஓட்ட விகிதமும் அமைந்திருந்தது.
எனினும், 10 ஓவர்களுக்கு பிறகு, துடுப்பாட்ட வீரர்களுக்கு கடிவாளம்போடும் வகையில் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் செயற்பட்டனர்.
இதனால், 16 ஆவது ஓவர்வரை, எந்த அணி வெற்றிபெறும் என்பதை உறுதியாக கணிப்பிடமுடியாதிருந்தது. 17 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசி,  சென்றை அணி பக்கம் வெற்றியை திரும்பினார் வொட்ஷன்.
இதையடுத்து 12 பந்துகளுக்கு 15 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலை உருவானதுடன், போட்டியும் பரபரப்பின் உச்சகட்டத்தை தொட்டது. 19 ஓவரை வீசிய பும்ரா,  மும்பை பக்கம் வெற்றியை திருப்ப முற்பட்ட நிலையில், விக்கெட் காப்பாளரின் கவனமின்மையால், இறுதி பந்தில் 4 ஓட்டங்கள் கிடைத்தன.
மறுபுறத்தில் அதிரடிகாட்டி மிரட்டிய வொட்ஷனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார். இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இதனால், சென்னை அணி வெற்றிவாகைசூடும் என அந்த அணியின் இரசிகர்கள் அடித்துக் கூறியதுடன், மைதானத்தில் மகிழ்ச்சி மழை பொழிந்தனர்.
மாலிங்க
வழமையாக ஐ.பி.எல். தொடரில் பந்துவீச்சில் பிரகாசிக்கும் இலங்கை அணி வீரரான லசித் மாலிங்கவுக்கு –  இறுதியாட்டத்தில் முதல் மூன்று ஓவர்களும் கைகொடுக்கவில்லை. 18 பந்துகளுக்கு 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததால் கடைசி ஓவரும் கைகொடுக்காது என்ற முடிவுக்கு பெரும்பாலானவர்கள் வந்தனர். எனினும், மாலிங்கமீது நம்பிக்கை வைத்து இறுதி ஓவரை வீசும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார் மும்பை அணி தலைவர்.
அத்துடன் நின்றுவிடாமல் – மலிங்கவை உற்சாகப்படுத்தியதுடன், இறுதி கட்டத்தில் களத்தடுப்பில் அதிரடி வியூகங்களையும் வகுத்தார். மலிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் களத்தடுப்பார்களை உரிய இடங்களில் நிறுத்தினார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் புன்னகையை தொலைக்காத விரல்விட்டு எண்ணக்கூடிய சில வீரர்களில் மலிங்கவும் ஒருவர்.
6 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள், அதுவும் இறுதியாட்டம். முதல் மூன்று ஓவர்களும் சொதப்பல். என்ன செய்ய போகின்றார் என ஓட்டுமொத்த பார்வையானர்களின் கவனமும் மலிங்க பக்கம்……இருந்தும் சிரித்தபடியே சவாலை சந்தித்தார்.
‘யோக்கர் பந்து’ க்கு பெயர்போன மலிங்க, முதல் ஐந்து பந்துகளையும் அதே பாணியில் மணிக்கு 140, 139 வேகத்தில் வீசினார். இருந்தும் அவற்றை ஓட்டமற்ற பந்துகளாக மாற்றமுடியாமல்போனது. 7 ஓட்டங்களை பெற்றனர் சென்னை வீரர்கள். இதனால், வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இறுதி பந்து மாறியது.
இறுதி பந்தையும் மலிங்க யோக்கராகவே செலுத்துவார்.  எவ்வித யுக்தியையும் கையாளமாட்டார். எனவே, உடலில் பந்துபட்டால்கூட ஒரு ஓட்டத்தை எடுத்து போட்டியை சமநிலையிலாவது முடித்துவிட வேண்டும் என்பதே களத்தில் இருந்த சென்னை வீரர்களின், எதிர்ப்பார்ப்பாக இருந்தது.
ஆனால், மலிங்க ஏவிய இறுதி அஸ்திரம் , சென்னை வீரர்களின் எதிர்ப்பார்ப்புகளை தவிடுபொடியாக்கின.  வழமைக்கு மாறாக மித வேகத்தில் பந்தை செலுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. அதுதான் ஆடுகள தந்திரம் என மலிங்கவின் இரசிகர்கள் மார்தட்டுகின்றனர்.ஆகமொத்தத்தில் இறுதி பந்தில் மலிங்க நாயகனாகிவிட்டார் என்றே கூறவேண்டும்.

கருத்து தெரிவிக்க