உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

அடுத்து என்ன? பிரதமர், ஐ.தே.க. உறுப்பினர்கள் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இந்தவாரம் நடைபெறவுள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் உட்பட மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன என்று பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து, நாட்டின் நலனைகருதி – சட்டம், ஒழுங்கு அமைச்சை, முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், ஜனாதிபதியை நேரில் சந்தித்து கடந்தவாரம் கையளித்தனர். எனினும், இதற்கு ஜனாதிபதி பச்சைக்கொடிகாட்டவில்லை.  ஐ.தே.கவின் கோரிக்கையை அவர் நிராகரித்துவிட்டார் என்றே ஆங்கில பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இது சம்பந்தமாகவும் ஐ.தே.க. கூட்டத்தில் ஆராயப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, சட்டம், ஒழுங்கு அமைச்சை, ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின்கீழிருந்து பிடுங்குவதற்கான முயற்சியை ஐக்கிய தேசியக்கட்சி இன்னும் கைவிடவில்லையென அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.

 

 

 

கருத்து தெரிவிக்க