நேபாள அரசு தங்களது நூறு ரூபாய் நோட்டுகளில் புதிய வரைபடத்தை (Map) அச்சிட முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த முடிவு ஒன்றும் புதிதல்ல என்று நேபாள பிரதமர் புஷ்ப குமார் தஹல் பிரசந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசி நேபாளி சேவையிடம் பேசிய நேபாள தகவல்துறை அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான ரேகா சர்மா, “பழைய வரைபடத்துடன் கூடிய நோட்டுகள் தீர்ந்துவிட்டன. அதனால்தான் நேபாள ஸ்டேட் வங்கிக்கு புதிய நோட்டுகளை அச்சிட அனுமதி தந்துள்ளோம். இது ஒரு வழக்கமான செயல்பாடு” என்று கூறியுள்ளார்.
மேலும், “புதிய நோட்டுகளின் வடிவமைப்பை மாற்ற நேபாள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வேறு எதுவும் நடக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “நேபாளம் ஒருதலைப்பட்சமாக சர்ச்சைக்குரிய பகுதிகளின் வரைபடத்தை தங்களது புதிய நோட்டுகளில் அச்சிட முடிவு செய்துள்ளது. இது நடைமுறையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது” என்று கூறினார்.
மேலும், “எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எல்லை தகராறு தொடர்பாக பேசுவதற்கு நியமிக்கப்பட்ட மன்றம் மூலம் நேபாளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வரை, அந்தப் பகுதிகளின் தற்போதைய நிலை மாறாது,” என்றும் கூறியுள்ளார் அவர்.
கடந்த வியாழனன்று, நேபாள அமைச்சரவை புதிய வரைபடத்துடன் கூடிய 100 மதிப்புடைய நேபாளி ரூபாய் நோட்டுகளை அச்சிட அந்நாட்டின் அரசு வங்கிக்கு அனுமதி வழங்கியது.
பிரசந்தா அரசின் இந்த முடிவு ராஜதந்திரம் மற்றும் பொருளாதார துறைகளில் எடுக்கப்பட்ட முதிர்ச்சியற்ற முடிவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நேபாளம் 2020 ஜூன் மாதத்தில், கலாபானி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வரைபடத்தை வெளியிட்டது.
நேபாளத்தின் அரசியலமைப்பு இந்த மாதம் மாற்றியமைக்கப்பட நிலையில், இந்த புதிய வரைபடம் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நேபாள அரசு விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே இந்த முடிவை எடுத்ததாக சில ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தால் வெளியிடப்பட்ட இந்த வரைபடத்திற்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்படவில்லை.
கருத்து தெரிவிக்க