இந்தியா

5 நாளில் அதிர்ச்சி… போர் ஜெட்களை இந்திய எல்லையில் இறக்கிய சீனா… சாட்டிலைட் ஆதாரம்

லடாக்: இந்தியா மற்றும் சீனா எல்லையில் இருக்கும் லடாக் பகுதியில் சீனா போர் விமானங்களை குவித்து வருகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா எல்லையான லடாக் மற்றும் சிக்கிம் பகுதிகளில் சீனா தொடர்ந்து அடாவடித்தனமாக அத்துமீறி வருகிறது. கடந்த மே 5ம் தேதியில் இருந்து இந்திய எல்லையில் சீன வீரர்கள் அத்து மீறி வருகிறார்கள்.


கடந்த மே 5ம் தேதி சீனாவின் ராணுவ ஹெலிகாப்டர் இந்திய எல்லைக்குள் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வரிசையாக சீனா லடாக் பகுதியில் படைகளை குவித்து வருகிறது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் லடாக் எல்லையில் சீனா 140 முறை அத்துமீறி உள்ளது. முக்கியமாக அங்கு இருக்கும் பாங்காங் டிசோ பகுதியில் உள்ள நதியில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது. இங்குதான் தற்போது பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்திய எல்லையில் இருக்கும் பாங்காங் டிசோ பகுதியில் தற்போது சீனா வீரர்கள் தங்கும் 100 டெண்ட்களை அமைத்துள்ளது.

அங்கு ஆயிரத்திற்கும் அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதி நவீன ஆயுதங்களை சீனா அங்கு குவித்துள்ளது. 100க்கும் அதிகமான பதுங்கு குழிகளை சீனா அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதுதான் தற்போது இங்கு பதற்றம் அதிகரிக்க காரணம். இந்தியாவும் அங்கு பதிலடி கொடுக்கும் வகையில் படைகளை குவித்து வருகிறது.

இந்தியா மற்றும் சீனா எல்லையில் இருக்கும் லடாக் பகுதியில் சீனா போர் விமானங்களை குவித்து வரும் சீனா தனது விமான படைத்தளத்தை விரிவாக்கியும் உள்ளது. இந்திய எல்லையில் இருந்து 100 முதல் 200 கிமீ தூரத்தில் இந்த பகுதி இருக்கிறது. அங்கிருக்கும் கரி குன்ஷா விமான நிலையம் அருகே இந்த விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி சீனாவிற்கு சொந்தமான பகுதியாகும். பாங்காங் நதிக்கு அருகில்தான் இந்த விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில்தான் கடந்த ஒரு வாரமாக சீனா தீவிரமாக படைகளை இறக்கி, அச்சுறுத்தல் செய்து வந்தது. சீனா எல்லைக்குள் இருக்கும் விமான தளத்தில் விமானங்கள் குவிக்கப்படுவதால் என்ன பிரச்சனை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த விமான படைத்தளத்தில் கடந்த ஐந்து நாட்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நடந்துள்ளது. இங்கிருந்து எளிதாக இந்தியாவை தாக்க முடியும். அதன்படி அங்கு புதிய ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்ட்டுள்ளது.

போர் தளங்கள் வந்து செல்லும் வகையில் அங்கு புதிய விமான ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு பங்கர்கள், புதிய விமானப்படை கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிலும் டாங்கிகளை வைத்து போர் செய்யும் வகையில் அந்த இடத்தை சீனா மாற்றி உள்ளது. இங்கு மொத்தம் 5 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த விமானங்கள் அங்கு நிறுத்தப்படவில்லை.

திடீர் என்று இந்த விமானங்கள் அங்கு இறக்கப்பட்டுள்ளது. சுகோய் 27 மற்றும் சுகோய் 30 விமானங்கள் இங்கே களமிறக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் முதன்மையான போர் விமானம் ஆகும். இதுதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெறும் 5 நாட்களில் இங்கு மொத்தமாக எல்லாம் மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த விமானத்தில் நிறைய மாற்றங்களை செய்து அங்கு களமிறக்கி உள்ளது.

அதற்கு அருகில் பல இடங்களில் ராணுவம் தங்கும் வகையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் இங்கு ராணுவ வாகனங்கள் வந்து செல்ல பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சீனா போருக்கு தயாராகி வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

நன்றி: ஷியாம்சுந்தர் இந்தியா.

கருத்து தெரிவிக்க