விளையாட்டு

கொரோனா ஊரடங்கில் மாணவர்களுக்கு இலவச சிலம்பாட்டப் பயிற்சி.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி – கல்லூரி மாணவர்களின் ஓய்வு நேரத்தை தமிழர்களின் பாரம்பர்ய வீர தற்காப்புக் கலையை இலவசமாகப் பயிற்றுவித்து சாகசம் செய்ய வைக்கிறார் சிலம்பாட்டப் பயிற்சியில் டாக்டர் பட்டம் பெற்ற சரண்ராஜ்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று மணலில் கடந்த ஒரு மாத காலமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலம்பாட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் நடைபெற்று வரும் இப்பயிற்சியில் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று சாகசம் செய்து வருகின்றனர். பாரம்பர்ய சிலம்பாட்டக் கலையை தேசிய அளவில் பல விருதுகள் பெற்றுள்ள டாக்டர் சரண்ராஜ் மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தருகிறார்.

இதுபற்றி சரண்ராஜ் கூறியவை “சிலம்பம், குத்துவரிசை, பிடிவரிசை, பூட்டுதல் எனப் பாரம்பர்ய தற்காப்புக் கலைகளை கற்றுத் தேர்ந்த நான், இதை நமது எதிர்கால சந்ததிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 18 வருடக் காலமாக சீர்காழியில் உள்ள எல்.எம்.சி பள்ளியில் இலவசப் பயிற்சியாகச் சொல்லித்தந்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் கோடை விழாவில் இத்தகைய பயிற்சி பெற்ற மாணவர்களின் வீர விளையாட்டு நிகழ்ச்சி நடைபெறும். அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளிப்பர். பல மாணவர்களுக்கு அது ஒரு ஊக்கமாக இருக்கும்

தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிக் கல்லூரி மாணவர்கள் ஓய்வில் இருக்கிற நேரத்தில், அவர்களுக்கு உடல்நலம், மனநலம் காக்கும் இப்பயிற்சியைச் சொல்லித் தரலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பித்தேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. சந்தப்படுகை, கீழமூவர்க்கரை, சிதம்பரம் எனப் பல ஊர்களிலிருந்து தினமும் சுமார் 150 மாணவர்கள் வந்து பயிற்சி பெறுகிறார்கள். வீரத் தமிழர் கழகம் என்ற பெயரில் இப்பயிற்சியை நான் சொல்லித் தருகிறேன். அதில், தற்போது பயிற்சி பெற்ற மாணவர் 16 பேரை படுக்க வைத்து ஒரே நேரத்தில் பறந்து தாண்டுகின்ற அற்புத நிகழ்ச்சியும் நிகழ்ந்திருக்கிறது. இந்தக் கொரோனா முடிந்த பிறகு இந்த நிகழ்ச்சியை கின்னஸ் சாதனையில் இணைத்து, அந்த மாணவருக்குப் பெருமை சேர்க்கவும் எண்ணியிருக்கிறேன். என் பணி தொடரும். தமிழனின் தற்காப்புக் கலை பரவும்” என்றார்.”

கருத்து தெரிவிக்க