உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பா.ஜ.க ஆட்சி செய்யும் தற்போதாவது இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுங்கள்

பா.ஜ.க ஆட்சி செய்யும் இந்த ஐந்து வருடங்களிலேனும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண உதவுங்கள் – சுப்ரமணியம் சுவாமியிடம் அருண்காந் கோரிக்கை.

இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் இற்கும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர சுப்ரமணியம் சுவாமி அவர்களுக்கும் இடையில் நீண்டநேர சந்திப்பொன்று ஷங்ரில்லா ஹோட்டலில் செவ்வாய்கிழமை மாலை (17) நடைபெற்றது.

இச்சந்திப்பு தொடர்பாக இலங்கை தேசிய ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

டாக்டர் சுவாமியுடன் கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் அவர்களும் செயலாளர் நாயகம் சிவன் ரவிசங்கர் அவர்களும் கலந்துரையாடியபோது வலியுறுத்தியதாவது….

பா.ஜ.க அரசானது பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் இந்த ஐந்து வருடங்களிலேனும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண உதவுங்கள்.

இவற்றிற்கு அப்பால் இலங்கை தமிழ் மக்களின் வறுமையொழிப்பு, தொழில்வாய்ப்பு, கல்வி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு ஆகிய விடயங்களில் கூடுதல் அக்கறை செலுத்தி தமது பங்களிப்பை வழங்கவேண்டும்.

குறிப்பாக யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கில் எந்த விதமான மறுவாழ்வு திட்டங்களும் பாரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக தொண்ணூராயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகி வருகின்றனர்.

அத்தோடு முன்னாள் போராளிகள் மறுவாழ்வு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. சில இடங்களில் முன்னால் போராளிகள் பிச்சை எடுத்தும் வருகின்றனர்.

இவர்களின் வாழ்வு இப்படியே நீடிக்கவேண்டுமா? மலையக மக்கள் பாரிய அளவு வறுமையின் பிடிக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாமல் திணறி வருகின்றனர்.

இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழ் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைப்பதென்பது மிகவும் அரிதாகிக்கொண்டு வருகின்றது.

ஆகவே எமது இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பை பெருக்குமுகமாக தொழில்பேட்டைகள் அமைக்க ஆவணசெய்யவேண்டும்.

அதேபோன்று கல்விசார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை பாரிய அளவு பெருக்கிட நிதியுதவியளிக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் வீட்டுத்திட்டத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

இக்கோரிக்கைகளை மேலும் வலியுறுத்தி செயல்வடிவம் கொடுக்க வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து தரப்படல் வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய டாக்டர் சுப்ரமணியம் சுவாமி அவர்கள் கூறும்போது தெரிவித்ததாவது.

தேசிய கண்ணோட்டத்தோடு நீங்கள் பேசுவதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்திய அரசானது இலங்கைக்கு பாரிய அளவு நிதி வழங்கும் ஒரு நாடாகும். உங்கள் கோரிக்கைகளை சாதகமான முறையில் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை கோருகின்றேன்.

கூடிய விரைவில் டெல்லியில் உயர்மட்ட சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்ய என்னாலான அனைத்து முயற்ச்சிகளையும் செய்கின்றேன் என்றார்.

கருத்து தெரிவிக்க