இளைய சமுதாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதற்கேற்ப இன்றைய இளைஞர்கள் தங்களது சக்தியை நல் வழியில் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சியில் பங்குபெற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டுபாட்டுடன் வளர்த்தால் நல்ல ஒரு இளைஞர் சமுதாயம் உருவாகும்.
இளைஞர் சமுதாயத்தை நல்ல முறையில் கொண்டு செல்வதற்கு குழந்தை பருவத்திலே அவர்களை நல்வழிப்படுத்தி வருதலில் பெற்றோர்களின் பங்கு அதிகம் உள்ளது என கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.
தலைவர் ராஜமணி பிரசாத் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக போதைப்பொருளை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றார்.
அண்மையில் கூட போதைப்பொருள் தொடர்பிலான விளம்பரங்களை காட்சிப்படுவதற்கு தடை விதித்திருந்தார். இந்த நிலையில் இளைஞர் சமுதாயம் போதைப்பொருளுக்கு அடிமையாகுவதிலிருந்து விடுப்பட என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும தெரிவித்ததாவது,
நமது சமுதாய இளைஞர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையானால் அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்படுவதோடு சமுதாயமும் சீர்கெடாகின்றது.
போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு குடும்பத்தினராலும், சமுதாயத்தினராலும் கைவிடப்பட்ட நிலையும் உள்ளது. இந்த மாதிரியான நிலைமை யாருக்கும் வர கூடாது.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற நிலையில் சமுதாய இளைஞர்கள் போதைப்பொருட்களினால் விளையும் இன்னல்கள் சார்ந்த விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
சமுதாய மேம்பாட்டினையும், வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு தேவையில்லாதவைகளில் நாட்டம் கொள்ளாது இருத்தல் நல்லது.
கல்வி, விளையாட்டு, பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் நாம் முன்னேற்றம் கண்ட சமுதாயமாக உருமாற உங்களின் உருமாற்றங்கள் அவசியம். அத்தகைய சூழலில் மலையக சமுதாய மாணவர்கள் விழிப்புணர்வோடு செயல்பட்டு நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இன்றைய இளைஞர்களிடம் சமூக அக்கறை காணப்பட்டாலும் கூட, அதில் சில இளைஞர்களிடம் குறைவாகவே காணப்படுகின்றது.
அவர்களது வாழ்க்கையே வாட்ஸ் ஆப், முகப்புத்தகம் என்றாகி விட்டது. ஒருவர் தப்பு செய்யும் போது ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயத்தை இது பாதிக்கிறது. இளைமையிலே குடி பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவதால் அவர்களால் சமுதாயம் சார்ந்த அக்கறைகளில் ஈடுபட முடியாமல் போகிறது.
இதை ஒவ்வொரு இளைஞர்களும் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தாலே போதும், அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில் என்பது புரியும் என்றார்.
கருத்து தெரிவிக்க