ஜோதிடம்

நவகிரக குருவும் – தட்சிணாமூர்த்தியும்! –I

தமிழகத்திலிருந்து குணா

குரு -1

‘குரு என்றால் யார்? நவகிரகங்களில் உள்ள குருவும், நாம் வரிசைப்படுத்தும் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற வரிசையில் வரும் குருவும் ஒன்றா? என்ற
கேள்வியுடன் சென்ற இதழ் கட்டுரையை முடித்திருந்தோம். அதைப்பற்றி பார்ப்போம்.
சிலர் ‘குரு பரிகாரம்’ என்றால் நவகிரகத்தில் உள்ள குருவுக்கே செய்ய வேண்டும், தட்சிணா மூர்த்திக்கு செய்வது தவறு என்றும், வியாழக்கிழமைதோறும்
நவகிரக குருவுக்கே பூஜைசெய்ய வேண்டும். குரு தட்சிணாமூர்த்திக்கல்ல என்றும் வாதிடுகின்றனர். இன்னும் சிலரோ இரண்டும்ஒன்றே என்றும்
சொல்கின்றனர்.

இதில் எது உண்மை என்று ஆராய்வது பதிலை கண்டறிவது மட்டுமின்றி குருவின் உண்மை தன்மையினை முழுமையாக புரிந்துகொள்ளவும் உதவும்.
முதலில் ‘குரு’ என்ற சொல் தமிழா, வடமொழியா என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. நாமும் அதை ஆராய்ந்தால்தான் அச்சொல்லின்
ஆழத்துக்குள்ளே செல்ல முடியும் என்பதால்…ஆராய்வோம். ஏனெனில் இக்கட்டுரையின் முக்கிய சாராம்சமே குருதானே!

‘குரு’ என்பதற்கு அந்தணன், ஆசான், சான்றோன் என்று வேறு பல பெயர்களும் இருக்கின்றன. குரு என்பது வடமொழி சொல்லே.
குருவிற்கு…குறிப்பாக நவகிரகங்களில் வரும் குருவிற்கு தமிழில் என்ன பெயர்? நவகிரகங்களின் தமிழ் பெயர்களைப் பார்ப்போம்!
சூரியன் – கதிரவன், சந்திரன்- சோமன், செவ்வாய் – நிலமகன், புதன் – அறிவன், குரு – சீலன், சுக்கிரன் – கங்கன், சனி – காரி, ராகு – கருநாகன், கேது –
செந்நாகன், வியாழனான நவகிரக குருவுக்கு தமிழில் ‘சீலன்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. ‘சீலன்’ என்ற பெயர் நல்குணம், நற்பண்பு மற்றும்
நல்ஒழுக்கம் என்ற பொருள் சார்ந்தே வருகின்றன. உதாரணமாய் குணசீலன், தர்மசீலன் போன்ற பெயர்களை சொல்லலாம். இவ்வளவு ஏன் குணத்திலும்,
பண்பிலும் சிறந்து விளங்குபவர்களை நாம் ‘ஒழுக்க சீலர்கள்’ என்றல்லவா அழைக்கிறோம்!

இதுபோலவே நவகிரகங்களில் உள்ள குருவும் நல்குணம், நற்பண்பு, நல்ஒழுக்கம் மற்றும் தலைமை மாண்பு போன்ற தன்மைகளை உருவாக்குபவர்
என்பதால் சீலன் என்று தமிழிழ் அழைக்கப்பட்டார். ஒருவரது ஆன்மீக வாழ்வு சிறக்க வேண்டுமெனில் ஜாதகத்தில் குருபலம்…அதாவது ‘சீலன்’ சிறப்பு
பலத்துடன் இருக்க வேண்டும்! ஆன்மீக வாழ்வென்பதே ஒழுக்கத்தை அடிப்படையாய் கொண்டது தானே.

ஆக, நம்முள் ஆன்மீக அதிர்வலைகளை விதைக்கும் பலம் நவகிரகங்களில் சீலனுக்கே உண்டென்றால் அது மிகையல்ல! இது ஒரு புறமிருக்கப்பட்டும்.
வடமொழி குருவிற்கு வருவோம்.

இப்பிரபஞ்சத்தின் முதல் குருவாய் போற்றப்படுவது சிவனே! அவரே கல்லால மரத்தின் அடியில் அமர்ந்த சிவவடிவான தட்சிணா முர்த்தியே! ஏனெனில்
வடமொழியில் குருவுக்கு ‘ அஞ்ஞானத்தை அழிப்பவர்’ என்ற பொருள் உண்டு. அதாவது நமது அஞ்ஞானத்தை அழித்து நமக்கு முக்தி தன்மையான
உண்மையை உணர்த்துபவரே குரு!

அவரது மரபை கடை பிடித்தவர்களே. ஞானிகளாகவும், குருமார்களாகவும் வலம் வந்தனர். இத்தகைய குரு நாதர்கள் ஆன்மீகத்துக்குரிய ஒழுக்கம்,
பண்புகள் நிறைந்தவர்களாக இருந்தார்கள். ஏன்.. தமிழில் இல்லையா? என்று வினா எழுப்ப வேண்டிய அவசியமே இல்லை!

இங்கே சித்தர்கள் இருந்தார்கள். ‘சித்’ என்றாலே அறிவு! உண்மையான பேரறிவை கொண்டவர்களே சித்தர்கள்! தமிழிலும் முதல் சித்தன் ‘சிவனே! இந்த
மரபில் வந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். எவராலும் கணிக்க இயலாத வாழ்வை இயல்பாய் கொண்ட பதிணெண் சித்தர்களும் பல மூட
நம்பிக்கைகளை அழிக்கும் வண்ணம் பாடல், தத்துவம், இலக்கணம் போன்றவற்றை படைத்தாலும் அடிப்படையில் ஒழுக்கத்தன்மை உள்ளவர்களாக
இருந்ததால் அந்த சித்தர் பெரு மக்களையும் ‘குரு’ என்ற அடைமொழி விடாமல் ஒட்டிக்கொண்டது.

இப்போது பாருங்கள்… தட்சிணா மூர்த்தியும் குருவே, ஞானிகள் மற்றும் சித்தர்களும் குருவே, நவகிரகத்தில் வரும் வியாழனான சீலனும் குருவே!
ஞானமும் ஒழுக்கத்தன்மையும் ஒத்ததாக மூவரிடமும் இருப்பதால் ஒரே பெயரில் அழைக்கப்படுவது வழக்கத்தில் வந்துவிட்டது.

ஆகவேதான் ‘பரிகாரம்’ என்னும் போது கோயிலில் உள்ள நவகிரக குருவிற்கா அல்லது தட்சிணாமூர்த்திக்கா என்ற குழப்பம் பலருக்கு வந்துவிடுகிறது.
ஆனால் இருவரில் எவராயினும் அது தவறில்லை என்றே நான் சொல்லுவேன்!

உதாரணத்துக்கு ஒரு அலுவலகத்தில் உங்களுக்கு ஒரு காரியம். ஆக வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்! அது கீழ் நிலை அதிகாரியாலேயே
முடியும் என்றாலும் நாம் மேலதிகாரியிடம் கோரிக்கை வைத்தால் ‘மனு’ பரீசிலிக்கப்பபடாமலா போகும்! அதுபோல்தான் இதுவும்!

ஒருசில ஆகமவிதிகள் படி நவகிரகங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட கோயில்களும் இருக்கத்தான்செய்கின்றன! அங்கே வீற்றிருக்கும் தட்சிணா
மூர்த்திக்கு நைவேத்தியத்துடன் பால் அபிஷேகத்தை நமது ஜென்ம நட்சத்திரத்தில் செய்தால், அது அனைத்து கிரக தோஷ பரிகாரமாகும் என்றும்
ஐதீகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் இதில் குழப்பத்துக்கு இடமே வேண்டாம்.

ஆனாலும் நமது கோரிக்கையை அது சம்பந்தபட்ட அதிகாரியிடமே கொடுத்து தீர்க்க முயலுவது தவறாகாது! அப்படி செய்ய நீங்கள் விரும்பினால் நவகிரக
குருவிற்கு பரிகாரத்தையும், வேண்டுதலை தட்சிணா மூர்த்தியிடமும் வைத்துவிடலாம்.

‘பரிகாரம்’ என்பதே கர்மாவை கழிக்க முயலும் ஒரு வழிதானே! அந்த சக்தி இறைவனுக்கு இல்லையென எவர்தான் சொல்ல முடியும்! மார்க்கண்டேயரின்
அற்ப ஆயுளை என்றும் பதினாறாக மாற்றியது இறைவன் அல்லவா?

அதுபோல பூமியில் வாழ்ந்த ஞானிகள், சித்தர்கள் காலடியை நாம் சரணடைந்தால் நவகிரகங்கள் தரும் கர்மாவை நாமே மாற்ற இயலும். காரணம்
அவர்களின் நவகிரக குருவின் அருள் மட்டுமல்ல, இறைவனின் அனுக்கிரகத்தினையும் பெற்றவர்கள்.
அதனால்தான் நம் கர்மாவினை அழிக்கும் இறைவருளை பெற, முதலில் இவர்களது அருளை பெறுவது அவசியமென்பேன்.

சரி நவகிரக குரு-தட்சிணா மூர்த்தி மற்றும் சித்தர்கள், ஞானிகளின் ஒத்த தன்மையினை பார்த்தோம். மேற்சொன்ன எவரிடம் சென்றாலும் நவகிரக
குருவின் திருவருள் கிடைக்கும் என்றும் உணர்ந்து கொண்டோம்.

இனி ஜாதக கட்டங்களில் குரு நின்ற வீடுகளுக்கான பலன்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

கருத்து தெரிவிக்க