Uncategorizedநேர்காணல்கள்

 தேயிலைத்துறை அழிந்துவிடும். அப்போது எம்மவர்களின் நிலை ?

மலையத்தின் தேயிலைப்பொருளாதாரம் இன்னும் 50ஆண்டுகளில் முற்றாக அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள், அரசாங்கத்தின் கவனிப்பாரற்ற நிலை, பெருந்தோட்ட நிறுவனங்களின் முதலீட்டின்மை போன்ற காரணங்களை வைத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
ஏற்கனவே பெருந்தோட்ட நிறுவனங்கள். தேயிலை தொழில்துறை நட்டத்தை எதிர்நோக்குவதாக கூறிவருகின்றனர்.
தொழிலாளர்களும் போதிய வருமானம் இல்லை என்ற காரணத்தினால் மாற்றுத்தொழில்களை நாடுகின்றனர்.
தொழிலாளிகளின் பிள்ளைகள் தேயிலைத்தோட்டத்துறையில் பணியாற்றுவதை கௌரவ குறைச்சலாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்களில் தொழிற்படையாக கருதப்படும் 18க்கும் 40; வயதுக்கும் இடைப்பட்டவர்கள், தேயிலை தொழில்துறையைக் காட்டிலும் முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்து அதன் மூலம் அதிக இலாபத்தை உழைக்கின்றனர்.
எனவே அவர்களுக்கு தேயிலை தொழில்துறை அவசியமற்ற ஒன்றாகிவிட்டது.
இதனைதவிர தேயிலைத்தொழிற்துறையின் பரப்பு முன்னரை விட குறைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன் தேயிலைக்கு முதலீடு செய்வதை பெருந்தோட்ட நிறுவனங்கள் கைவிட்டு விட்டன.
இதன்காரணமாக தரமான தேயிலையை சந்தைக்கு அனுப்பமுடியாத நிலை தோன்றியுள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களை பொறுத்தவரையில் அவைகள், தேயிலையில் இருந்து இலாபத்தை பெற்றுவிட்டன.
ஆரம்பத்தில் தேயிலைத்துறையை கையேற்றபோது பெருந்தோட்ட நிறுவனங்கள் பெறுமதிவாய்ந்த மரங்களை வெட்டி அதன் மூலம் உரிய இலாபத்தை திரட்டிவிட்டன.
இதன் பின்னர் இருக்கின்ற தேயிலையின் மூலம் இலாபத்தை பெற்றுவிட்டனர்.
எனவே அந்த நிறுவனங்கள்,எந்த நேரத்திலும் தேயிலைத் தோட்டங்களை கைவிட தயாராகவே உள்ளன.
பெரும்பாலான நிறுவனங்கள் இறப்பர் மற்றும் தெங்கு தோட்டங்களின் உரிமைகளையும் கொண்டிருப்பதன் காரணமாகவே தேயிலை தோட்டங்களை கைவிடமுடியாத நிலையில் உள்ளன.
“பாம்ஒய்ல்” உற்பத்தியின் மூலமும் தெங்கு பயிர்ச்செய்கையின் மூலம் பெருந்தோட்ட நிறுவனங்கள் அதிக இலாபங்களை திரட்டுகின்றன.
இதில் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களை காட்டிலும் அதிக வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கிறது.
அரசாங்கம், தேயிலைத்தோட்டங்களை கைவிட்டு இறப்பர் மற்றும் தெங்கு தோட்டங்களை மாத்திரம் கொண்டிருக்கமுடியும் என்று அறவித்தால் பெரும்பாலும் அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களும் தேயிலைத்துறையில் இருந்து விலகிச்சென்றுவிடும் தயார் நிலையில் உள்ளன.
இதனை அந்த நிறுவனங்களின் வருடாந்த கணக்கறிக்கைகளின் மூலம் அறி;ந்துக்கொள்ளமுடிவதாக பட்டயக்கணக்காளர் கந்தையா சுந்தரராஜ் கூறுகிறார்.
மறுபுறத்தில் இந்த பெருந்தோட்டங்களின் எதிர்காலம் தொடர்பில் தம்மை பொறுத்தவரையில் தெளிவான கொள்கை ஒன்று இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தேயிலைத் தொழிற்துறை எப்படி சென்றாலும் பரவாயில்லை என்ற நிலைமையே தற்போது உள்ளது.
ஏற்கனவே நான்கு இலட்சம் பேர் வரையில் தொழிலாளர்களை கொண்டிருந்த தேயிலைத் தொழிற்துறையில் இன்று ஒன்றரை லட்சம்  தொழிலாளர்களே உள்ளனர்.
எனவே சடுதியாக குறைந்துவரும் இந்த தொழில்துறையை முன்னேற்றவேண்டுமானால் தொழிலாளர்கள் வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்படவேண்டும்.
அல்லது தேயிலைத்துறையில் தொழிலாளர்களின் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் புதிய கருவித்தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவேண்டும்.
எனினும் இந்த இரண்டையும் செய்வதற்கு அரசாங்கமோ அல்லது பெருந்தோட்ட நிறுவனங்களே தயாராக இல்லை.
கடந்த 20 வருடங்களாக பெருந்தோட்ட நிறுவனங்கள் எந்தளவுக்கு தேயிலைக்கு பசளைகளை பயன்படுத்தின என்பதை பார்க்கின்றபோது தேயிலைத்துறையில் அவை முதலீடுகளை மேற்கொள்ள உத்தேசம் கொண்டிருக்கவில்லை என்பது புரிகிறது.
பழைய தேயிலைகளுக்கு பதிலாக புதிய தேயிலைகளை பயிரிடும் நோக்கம் எதனையும் பெருந்தோட்ட நிறுவனங்கள் கொண்டிருக்கவில்லை.
தனிவீட்டுத்திட்டத்துக்கு காணி வழங்குகின்றபோது தரிசுக்காணிகளை விடுத்து, தேயிலைக்காணிகளை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள்  உடன்படுகின்றமை அவற்றின் நோக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன.
தனிவிட்டு திட்டம் என்பது பிழையான விடயம் அல்ல. எனினும் அது ஒரே பெருந்தோட்டத்தில் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்படுகின்றமையே பிழையான விடயமாகும்.
இதன் காரணமாக தேயிலைப்பயிர்ச்செய்கையின் பரம்பல் பாதிக்கப்படுகிறது.
சீனாவை பொறுத்தவரையில் அங்கு குறைந்த செலவில் அதிக உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்காரணமாக உற்பத்திகளுக்கான செலவீனங்களை குறைக்க முடிகிறது.
பின்னர் அந்த உற்பத்திப்பொருட்கள், குறைந்த இலாபத்தை கொண்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.
அதுவே சீனா பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான காரணமாகும்.
தாய்லாந்தை எடுத்துக்கொண்டால் அங்கு பல ஹெக்டேயர்கள் காணியில் பயிர்ச்செய்கை  மேற்கொள்ளப்படுகிறது
எனினும் விவசாயிகளின் குடியிருப்புக்கள் ஒரே இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
இதனைக்கருத்திற்கொண்டே பிரித்தானியர்கள், பெருந்தோட்டங்களில் லய்ன் முறையை ஆரம்பித்தனர்.
லய்ன் முறையை ஒழிக்கவேண்டும்; என்று நினைத்தால் லய்ன்களை தகர்;த்து விட்டு அந்த இடங்களில் தனிவீடுகளை அமைத்துக்கொடுக்கமுடியும்.
இதற்காக தேயிலை பயிர்ச்செய்கையை அழிப்பதை தவிர்க்கமுடியும்.
எனவே இந்த தொழில்துறையின் எதிர்காலம் என்ன என்பதே இப்போது ஆராயப்படவேண்டிய விடயமாக உள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்கள் தேயிலை தொழிற்துறையில் முதலீடுகளை செய்ய துணியவில்லை.
அரசாங்கமும் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றால், பெருந்தோட்டத்துறை சார்ந்த அரசியல்வாதிகள் தமது சிந்தனைகளை ஐந்து வருடத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் 50 வருடங்கள் முன்னோக்கி செலுத்தவேண்டும்
இதன்போது பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கமுடியும்.
பெருந்தோட்ட தேயிலைத்துறை அழிந்துவிடுமானால் அதில் உள்ளவர்கள் வேறு தொழில்களை நாடுவர். அல்லது வெளிநாடுகளுக்கு செல்வர். அல்லது மாறுபட்ட தொழில்களுக்கு பழக்கப்பட்டு விடுவர்.
எனினும் இந்தவிடயத்தில் அரசியல்வாதிகள் தவறுசெய்தால் அது பெருந்தோட்டத்துறையின் தமிழ் சமூக இருப்பை கேள்விக்குரியதாக்கிவிடும்.
தற்போதே அந்தக்கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில் தமிழர்களின் இருப்பில் தளர்வு ஏற்பட்டு விட்டது
பெருந்தோட்டத்துறை அதிகாரிகள் மட்டத்தில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
தொழிலாளர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் ஏனைய சமூகத்தினரை தோட்டங்களுக்குள் வந்து குடியேறச்செய்துள்ளன.
இது நல்லிணக்கம் என்ற அடிப்படையில் இலங்கையின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரலாம்
ஆனால், மீண்டும் அது பெருந்தோட்டத்தொழிலாளர்களின் முழுமை இருப்புக்கே பாதிப்பை ஏற்படுத்திவிட்டால் அந்த வரலாற்று தவறுக்கு இன்றைய அரசியல்வாதிகளே காரணமாகிவிடுவர்.
இந்தநிலையில் தேயிலை தொழில்துறையில் உள்ள மக்களை காப்பாற்றுவதா? அல்லது தேயிலைத்துறையை காப்பாற்றுதா? என்பதே கேள்வியாக உள்ளது
இன்று “சிலோன்டீ” என்ற தேயிலை உற்பத்தியும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இந்;திய அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து மலையக அரசியல்வாதிகள் கலந்தாலோசனை செய்யவேண்டும்.
இலங்கையில் தமிழர்களி ன் இருப்பு என்ற இந்திய நலனுக்கு சிறப்பானது என்பது யதார்த்தமானது.

கருத்து தெரிவிக்க